/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மணலி துணை மின் நிலையத்தில் தீ விபத்து: மின் தடையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
/
மணலி துணை மின் நிலையத்தில் தீ விபத்து: மின் தடையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மணலி துணை மின் நிலையத்தில் தீ விபத்து: மின் தடையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மணலி துணை மின் நிலையத்தில் தீ விபத்து: மின் தடையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ADDED : டிச 15, 2025 05:40 AM

சென்னை: மணலியில் உள்ள, 400 கிலோ வோல்ட் திறன் உடைய துணை மின் நிலையத்தில், நேற்று ஏற்பட்ட தீ விபத்தால் வட சென்னையில் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது.
சென்னை அடுத்த மணலியில் மின் வாரியத்திற்கு 400/230 கிலோ வோல்ட் திறனில் துணை மின் நிலையம் உள்ளது. வட சென்னை அனல் மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தின் ஒரு பகுதி, இந்த துணை மின் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டு, பல்வேறு பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், நேற்று அதிகாலை 5:02 மணிக்கு, மணலி, 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்தில் உள்ள, 315 'மெகா வோல்ட் ஆம்பியர்' திறனுடைய பவர் டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுதால் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தகவலறிந்த, மணலி, மாதவரம் உள்ளிட்ட நான்கு தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பின், தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். மேலும், டிரான்ஸ்பார்மரில் இருந்து மின்சாரம் நிறுத்தப்பட்டதால், வட சென்னையின் பல்வேறு இடங்களில் நேற்று காலை மின்தடை ஏற்பட்டது. இதனால், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பின், மணலி துணை மின் நிலையத்திற்கு வந்த, மின் வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், தீ விபத்து குறித்து ஆய்வு செய்தனர்.
அப்போது ராதாகிருஷ்ணன், ''மாற்று டிரான்ஸ்பார்மர் வாயிலாக, மின்தடை ஏற்பட்ட பகுதியில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' தெரிவித்தார். விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

