/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தீயணைப்பு துறை போட்டிகள் வடசென்னை அணி 'சாம்பியன்'
/
தீயணைப்பு துறை போட்டிகள் வடசென்னை அணி 'சாம்பியன்'
ADDED : பிப் 08, 2025 12:16 AM
சென்னை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில், வடமண்டல பணியாளர்களுக்கான மண்டல விளையாட்டு போட்டிகள், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., கல்லுாரி மைதானத்தில், கடந்த 4ம் தேதி துவங்கி, நேற்று நிறைவடைந்தன.
இதில், தீயணைப்பு துறை சார்ந்த திறனறி போட்டிகளான அணி பயிற்சி, ஏணி பயிற்சி, தந்திர கதம்பம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஓட்டம் போன்ற தடகள போட்டிகளும், நீச்சல், வாலிபால், கூடைப்பந்து, பேட்மின்டன் உள்ளிட்ட, 29 வகையாக போட்டிகளும் நடத்தப்பட்டன.
போட்டியில், தீயணைப்பு துறையின் வட மண்டலத்திற்கு உட்பட்ட தென்-சென்னை, வட சென்னை, மத்திய சென்னை, சென்னை புறநகர் மாவட்ட தீயணைப்பு வீரர்கள், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தினர்.
மூன்று நாட்கள் நடத்தப்பட்ட அனைத்து போட்டிகள் முடிவில், வடசென்னை மாவட்டம் முதலிடத்தை பிடித்து, சாம்பியன் கோப்பையை வென்றது.
தொடர்ந்து, தென்சென்னை மாவட்டம் இரண்டாமிடத்தையும், சென்னை புறநகர் மாவட்டம் மூன்றாம் இடத்தையும் கைப்பற்றின.
வெற்றி பெற்ற வீரர்களுக்கு, வடமண்டல இணை இயக்குனர் சத்தியநாராயண் பரிசுகளை வழங்கினார்.
இப்போட்டியில், பல்வேறு போட்டிகளில் முதலிடத்தை பிடித்த 20 வீரர்கள், இம்மாதம் இறுதியில் மதுரையில் நடக்கும் தீயணைப்பு துறையின் மாநில போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.