/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அதிகாரிகளால் வருவாய் பாதிப்பு இழப்பீடு எதிர்பார்க்கும் மீனவர்கள்
/
அதிகாரிகளால் வருவாய் பாதிப்பு இழப்பீடு எதிர்பார்க்கும் மீனவர்கள்
அதிகாரிகளால் வருவாய் பாதிப்பு இழப்பீடு எதிர்பார்க்கும் மீனவர்கள்
அதிகாரிகளால் வருவாய் பாதிப்பு இழப்பீடு எதிர்பார்க்கும் மீனவர்கள்
ADDED : ஜூன் 17, 2025 11:55 PM
சென்னை:உரிய காலத்தில் படகுகளை அதிகாரிகள் ஆய்வு செய்யாததால் ஏற்பட்ட வருவாய் பாதிப்பை, அரசு இழப்பீடாக வழங்க வேண்டும் என, மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீன்பிடி தடை காலத்தில், கிழக்கு கடற்கரை திருவான்மியூர் குப்பம் முதல், எண்ணுார் சிவன் படை குப்பம் வரை உள்ள நாட்டுப் படகுகளுக்கு, கடந்த மாதம் 22ம் தேதி ஆய்வு செய்யப்படும் என, மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவித்தனர்.
அதனால், கடலுக்கு மீன்பிடிக்க சென்ற படகுகள் உட்பட அனைத்து நாட்டுப் படகுகளும், கரையில் நிறுத்தி வைக்கப்பட்டன. ஆனால், நிர்வாகக் காரணம் எனக்கூறி, அன்று ஆய்வு நடத்தப்படவில்லை.
பின், கடந்த மாதம் 26ம் தேதி மீண்டும் ஆய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டும் ஆய்வு செய்யவில்லை. இம்மாதம் 10ம் தேதி அறிவிக்கப்பட்டது; அதுவும் நடக்கவில்லை.
இப்படி, மூன்று முறை நாட்டுப் படகுகளை கடலுக்கு செல்ல விடாமல், கரையில் நிறுத்தி வைக்கப்பட்டதால், ஒவ்வொரு படகுக்கும், 1.5 லட்சம் ரூபாய் வரை, வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து, அனைத்து மீனவர்கள் சங்க தலைவர் நாஞ்சில் ரவி கூறியதாவது:
கிழக்கு கடற்கரையில், மீன்பிடி தடை காலமான இந்த நேரத்தில்தான், விசைப்படகுகள் தொழிலுக்கு செல்லாது. இந்த நேரத்தில் மட்டும் தான், நாட்டுப்படகு மீனவர்கள் உற்சாகமாக மீன்பிடிக்க செல்ல முடியும். போதிய வருவாய் கிடைக்கும். இப்போது மீன்பிடி தடை காலமே முடிந்துவிட்டது.
தொடர்ந்து மீனவர்களை துன்புறுத்தும் நோக்கில், மூன்று முறை ஆய்வு நடத்தாமல், வாழ்வாதாரத்தை பறிக்கும் இந்த செயலை கண்டிப்பதோடு, மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் பாதிப்பிற்கு, தமிழக மீன்வளத்துறை இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.