/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காசிமேடு மீன்பிடி துறைமுக மேம்பாட்டு பணி ஆமைவேகத்தால் மீனவர்கள் கடுமையாக பாதிப்பு
/
காசிமேடு மீன்பிடி துறைமுக மேம்பாட்டு பணி ஆமைவேகத்தால் மீனவர்கள் கடுமையாக பாதிப்பு
காசிமேடு மீன்பிடி துறைமுக மேம்பாட்டு பணி ஆமைவேகத்தால் மீனவர்கள் கடுமையாக பாதிப்பு
காசிமேடு மீன்பிடி துறைமுக மேம்பாட்டு பணி ஆமைவேகத்தால் மீனவர்கள் கடுமையாக பாதிப்பு
ADDED : ஏப் 08, 2025 01:08 AM

காசிமேடு, காசிமேடு மீன்பிடி துறைமுகம், 23 மீனவ கிராமங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது. இங்கிருந்து பிற மாநிலங்களுக்கு மட்டுமல்லாமல், துபாய், சிங்கப்பூர், மலேஷியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் மீன் வகைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
பல கோடி ரூபாய் அன்னிய செலாவணி ஈட்டி தரும் காசிமேடு மீன்பிடி துறைமுகம், பராமரிப்பின்றி சுகாதார சீர்கேடுடன் உள்ளது. படகுகளை நிறுத்துவதற்கு போதிய இடம் இல்லாததும், பெரும் பிரச்னையாக இருந்தது. எனவே, காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தை மேம்படுத்த வேண்டும் மீனவ சங்கங்களின் என கோரிக்கை வலுத்தது.
இதையடுத்து, 97.75 கோடி ரூபாய் மதிப்பீடில், காசிமேடு மீன்பிடி துறைமுகம் மேம்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவிக்கப்பட்டது.
அதில், 500 விசைப்படகுகள் நிறுத்தும் வகையில் வார்ப்பு தளம்; 100 நாட்டு படகுகள் மற்றும் பைபர் படகுகள் நிறுத்த படகு அணையும் தளம்; மீன் பதப்படுத்தும் கூடம்; மீன் வலை பழுதுபார்க்கும் கூடங்கள், புதிய வார்ப்பு தளம் துவங்கி பழைய மீன் ஏலக்கூடம் வரை உள்ள 6 கி.மீ., சாலை மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையம் முதல் காசிமேடு துறைமுகம் ஜீரோ கேட் வரை சுற்றுச்சுவர்; கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்; இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட, 25 திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, கடந்த 2022ல் பணிகள் துவங்கின.
ஆனால், கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி வழங்கப்படவில்லை எனக்கூறி வழக்கு தொடரப்பட்ட நிலையில், பணிகள் கிடப்பில் போடப்பட்டன.
மீன்வளத் துறை அதிகாரிகள், கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி வாங்கினர்.
பின் 2023, டிசம்பரில், ராயபுரத்தில் மீனவர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில், மீனவர்கள் பணிகளை விரைந்து துவங்கி முடிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.
கடந்த 2024, ஜூனில் மீண்டும் பணிகள் துவங்கி நடந்து வந்த நிலையில், ஓராண்டாகியும் துறைமுக பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதாகவும், 30 சதவீத பணிகள் கூட முடிவடையவில்லை. இதனால் மீன் விற்பனை பாதிக்கப்படுவதாகவும் மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
படகுகள் பலத்த சேதம்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விசைப்படகு நலச்சங்க பொருளாளர் வி.கருணாகரன், 66, கூறியதாவது:
விசைப்படகுகளை நிறுத்தும் வகையில் போதிய வார்ப்பு தளம் இல்லாததால், படகுகளை நிறுத்துவதில் மீனவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.
விரைவில் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வர உள்ளதால், படகுகள் கட்டுவதற்கு இடம் இல்லாத நிலை ஏற்படுகிறது. மேலும் மூன்று, நான்கு அடுக்குகளாக படகு கட்டப்படுகிறது.
புயல், மழை காலங்களில் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி பெரியளவில் சேதங்களும் ஏற்படுகிறது. எனவே, போர்கால அடிப்படையில், அதிகாரிகள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து, மீனவர் மக்கள் முன்னணி கட்சி தலைவர் வே.சங்கர், 63, கூறியதாவது:
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை நவீனப்படுத்தும் பணிகள் நடந்து வரும் நிலையில், இரண்டு ஆண்டுகளாகியும், 25 சதவீத பணிகள் கூட முடிவடையவில்லை.
தற்போது கூரை அமைக்கும் பணிகளால், 100 படகுகள் நிற்கும் இடத்தில், 10 படகுகளில் கூட, மீன்களை இறங்கி வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.