/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நாட்டு படகுகளுக்கு மானியத்தில் இன்ஜின் ஒதுக்கீடு குறைவால் மீனவர்கள் அதிருப்தி
/
நாட்டு படகுகளுக்கு மானியத்தில் இன்ஜின் ஒதுக்கீடு குறைவால் மீனவர்கள் அதிருப்தி
நாட்டு படகுகளுக்கு மானியத்தில் இன்ஜின் ஒதுக்கீடு குறைவால் மீனவர்கள் அதிருப்தி
நாட்டு படகுகளுக்கு மானியத்தில் இன்ஜின் ஒதுக்கீடு குறைவால் மீனவர்கள் அதிருப்தி
ADDED : செப் 08, 2025 06:13 AM
சென்னை: பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு, 40 சதவீத மானியத்தில் இன்ஜின் வழங்கும் திட்டத்தில், 50 மீனவ கிராமங்கள் உள்ள சென்னைக்கு, 100 மட்டுமே ஒதுக்கியுள்ளது, மீனவர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.
மீன்வளத்துறை சார்பில், பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு, 40 சதவீதம் மானியத்தில், இன்ஜின்கள் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அந்த வகையில், திருவள்ளூர், 115; சென்னை, 100; செங்கல்பட்டு, 120 என, 335 பேருக்கு மானிய விலையில் இன்ஜின்கள் வழங்கப்பட உள்ளன.
அதாவது, 10 புள்ளிகள் குதிரைத் திறன் கொண்ட இன்ஜின் ஒன்றின் விலை 80,000 ரூபாய். இதில், 40 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
மானிய இன்ஜின் கோரி விண்ணப்பிக்க, கடந்த ஜூன் மாதம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
இந்நிலையில், சென்னைக்கு 100 இன்ஜின்கள் மட்டுமே ஒதுக்கி இருப்பது மீனவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, தென்னிந்திய மீனவர் நல சங்க தலைவர் பாரதி கூறியதாவது:
திருவான்மியூர் முதல் தண்டையார்பேட்டை வரை உள்ள மீனவ கிராமங்கள் சென்னைக்கு உட்பட்டு இருந்தன. தற்போது, எண்ணுார் வரை விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இதனால், 50க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் சென்னை மாவட்டத்தில் உள்ளன.
இந்நிலையில், மானிய விலையில் நாட்டுப் படகுகளுக்கு உள் மற்றும் வெளி பொருத்தும் இன்ஜின்கள் வழங்கும் திட்டத்தில், சென்னைக்கு 100 இன்ஜின்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
துறைமுகங்களில் இயங்கும் படகுகள் பழுது ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்கும். ஆனால், மற்ற இடங்களில் கரையோரங்களில் நிறுத்தப்படும் நாட்டுப் படகுகள் தண்ணீர் புகுந்து, அடிக்கடி பழுது ஏற்படும்.
இதனால், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை அவர்களுக்கு இன்ஜின் வழங்கப்படுகிறது. ஒரு கிராமத்திற்கு, இரண்டு என்ற அடிப்படையில் இன்ஜின் வழங்குவது, மீனவர்களை வஞ்சிக்கும் செயல்.
எனவே, இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்தி, விரைவில் இன்ஜின்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.