/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மீன்பிடி தடைக்காலம் நாளை துவக்கம் ஜூன்14 வரை 61 நாட்கள் தொடரும்
/
மீன்பிடி தடைக்காலம் நாளை துவக்கம் ஜூன்14 வரை 61 நாட்கள் தொடரும்
மீன்பிடி தடைக்காலம் நாளை துவக்கம் ஜூன்14 வரை 61 நாட்கள் தொடரும்
மீன்பிடி தடைக்காலம் நாளை துவக்கம் ஜூன்14 வரை 61 நாட்கள் தொடரும்
ADDED : ஏப் 13, 2025 09:24 PM
காசிமேடு:தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான மீன்பிடித் தடைக்காலம் நாளை துவங்குகிறது. இதனால் இனி மீன்களின் விலை உயரும் என தெரிகிறது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் ஆழ்கடலில் மீன்பிடிக்க 61 நாட்கள் தடை விதிக்கப்படுகிறது.
அதன்படி, இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் நாளை துவங்குகிறது. வரும் ஜூன் 14ம் தேதி வரையிலான, 61 நாட்கள் அமலில் இருக்கும். தடை காரணமாக, சென்னை, திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் துவங்கி கன்னியாகுமரி வரை உள்ள கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மாட்டார்கள். 20,000 விசைப் படகுகள் கடலுக்குச் செல்லாமல் மீன்பிடித் துறைமுகங்களில் நங்கூரமிடப்பட்டு நிறுத்தப்படும்.
மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகுகள் கடலுக்குள் செல்ல அனுமதிக்கப்படாததால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, மீனவர் குடும்பங்களுக்கு தலா 8,000 ரூபாய் வீதம் மீன்பிடித் தடைக்கால நிவாரணம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
இந்த தடைக்காலத்தில் மீனவர்கள் தங்களது படகுகளை பழுதுபார்த்தல், வலைகளை புதுப்பித்தல், மீன்பிடி உபகரணங்களை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வர். சிறிய கட்டுமர மீனவர்கள் மட்டும் கடலில் சிறிது துாரம் சென்று மீன் பிடித்து வருவர். மீன்பிடித் தடைக்காலத்தையொட்டி, மீன், இறால், நண்டு ஆகியவற்றின் விலை இருமடங்கு உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மீனவ சங்கத்தினர் கூறியதாவது:
தமிழகம் முழுதும் மீன்பிடித் தடைக்காலத்தில், 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மறைமுகமாக வேலைவாய்ப்பை இழப்பர். மீன்பிடி தடைக்கால நிவாரண உதவித்தொகையை, 25,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.
கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட மேற்கு கடலோர பகுதிகளில், அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில், மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது.
ஆனால், கிழக்கு கடலோர பகுதிகளான தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலுார், நாகபட்டினம், புதுச்சேரி, காரைக்கால், புதுக்கோட்டை, துாத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில், ஏப்ரல், மே, ஜூன் என கோடை காலத்தில் மீன் இனப்பெருக்கும் செய்யுமென கூறி, மீன்பிடித் தடைக்காலம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த காலத்தில், மீன்கள் இனப்பெருக்கம் செய்ய வாய்ப்பு இல்லை.
எனவே, தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மீன்பிடித் தடைக்காலத்தை அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

