மசாஜ் சென்டரில் புகுந்து திருடிய ஐந்து பேர் கைது
மசாஜ் சென்டரில் புகுந்து திருடிய ஐந்து பேர் கைது
ADDED : பிப் 12, 2026 05:56 AM
வேளச்சேரி: வேளச்சேரி விரைவு சாலையில், 'மந்த்ரா' என்ற பெயரில், ஒரு மசாஜ் சென்டர் உள்ளது. கடந்த 7ம் தேதி இரவு, அங்கு வந்த எட்டு பேர், மசாஜ் செய்ய வேண்டும் எனக்கூறி, அங்கிருந்த பெண் ஊழியர்களிடம் பேச்சு கொடுத்தனர்.
திடீரென கத்தியை காட்டி மிரட்டிய அவர்கள், பெண் ஊழியர்கள் அணிந்திருந்த 6 சவரன் நகை, 7 மொபைல் போன்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா பதிவு அடங்கிய டி.வி.ஆர்., ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
வேளச்சேரி போலீசார், இரண்டு தனிப்படை அமைத்து, திருட்டில் ஈடுபட்டோரை தேடி வந்தனர். அதில், தரமணியை சேர்ந்த ஆனந்தகுமார், 40, ரவிக்குமார், 48, வீரமருது, 31, தினேஷ், 30, ஜெகதீஷ், 22, உள்ளிட்டோர் என, தெரிந்தது.
நேற்று அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 6 சவரன் நகை, 5 மொபைல் போன்கள் மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்திய ஆட்டோ, இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவான மூன்று பேரை தேடி வருகின்றனர்.
