/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வங்கி நிதி மோசடி வழக்கு ஐந்து பேருக்கு சிறை
/
வங்கி நிதி மோசடி வழக்கு ஐந்து பேருக்கு சிறை
ADDED : ஜன 01, 2025 12:48 AM
சென்னை, சென்னை, முகப்பேரில் சென்ட்ரல் வங்கி உள்ளது. இந்த வங்கி பொது மேலாளர், கடந்த 2009 செப்., 3ல், அளித்த மோசடி புகார் குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்தியது.
கிருஷ்ணா பில்டர்ஸ் உரிமையாளர் டி.வி.கிருஷ்ணா ராவ் உள்ளிட்டோர் கூட்டு சேர்ந்து, முறைகேடாக 25 கோடி ரூபாயை, பல்வேறு நபர்களின் வங்கி கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்து, மோசடி செய்தது தெரிய வந்தது.
மோசடி, போலியாக ஆவணங்கள் தயார் செய்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், கிருஷ்ணா ராவ், ஹரி, சுக்ராகுமார், பத்மநாபன், ரவிசங்கர், சங்கரகுமார், வாசுதேவன் உள்ளிட்ட, 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, சென்னை 11வது கூடுதல் சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 13 பேருக்கு எதிராக, 2010ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கில், கிருஷ்ணா ராவுக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையும், 4 லட்சம் ரூபாய் அபராதமும், ஹரி, ரவிசங்கர், சுக்ராகுமார் ஆகியோருக்கு தலா நான்கு ஆண்டு சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. பத்மநாபனுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி டி.பி.வடிவேலு தீர்ப்பளித்தார். மற்றவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால், அவர்களை விடுவித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.