/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கடம்பூரில் தாவரவியல் பூங்கா பணி 'டெண்டர்' வெளியிட்டது வனத்துறை
/
கடம்பூரில் தாவரவியல் பூங்கா பணி 'டெண்டர்' வெளியிட்டது வனத்துறை
கடம்பூரில் தாவரவியல் பூங்கா பணி 'டெண்டர்' வெளியிட்டது வனத்துறை
கடம்பூரில் தாவரவியல் பூங்கா பணி 'டெண்டர்' வெளியிட்டது வனத்துறை
ADDED : ஜன 19, 2026 05:53 AM
சென்னை: கடம்பூரில், தாவரவியல் பூங்கா பணிக்கான அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்த, ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்யும் பணிகளை வனத்துறை துவக்கி உள்ளது.
தமிழகத்தில் முதல் முறையாக, செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் அடுத்த கடம்பூரில், 347 ஏக்கரில், தாவரவியல் பூங்கா அமைக்கப்படும் என, தமிழக அரசு 2022ல் அறிவித்தது. இங்கிலாந்தின் கியூ நகரில் உள்ள, 'ராயல் பொட்டானிக்கல் கார்டன்' நிர்வாகத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதையடுத்து, தாவரவியல் பூங்காவிற்கான முழுமை திட்டம், தனியார் கலந்தாலோசகர் வாயிலாக தயாரிக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள ஐவகை நிலங்களின் தன்மையை பிரதிபலிக்கும் வகையில், இந்த பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில், பொது மக்களுக்கான பொழுதுபோக்கு மற்றும் அறிவுசார் மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இது தொடர்பான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
இப்பணிகளுக்கான ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்வதற்கான பணிகள் துவங்கியுள்ளன. இதற்கான டெண்டர் அறிவிப்பை வனத்துறை வெளியிட்டுள்ளது. தமிழக நெய்தல் மீட்சி இயக்கம் வாயிலாக, இது தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதுப்பொலிவு பெற்றது நாவலுார் ஏரி புனரமைக்கப்பட்ட நாவலுார் ஏரியை சுற்றி, 'சிப்காட்' நிறுவனம் பூங்காஅமைத்துள்ளது. இந்த பூங்கா விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
தமிழகத்தில், தொழிற்சாலை அமைக்கும் நிறுவனங்களுக்கு தேவைப்படும் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளுடன் தொழில் பூங்காக்களை, 'சிப்காட்' எனும் தமிழக அரசின் தொழில் முன்னேற்ற நிறுவனம் அமைக்கிறது.
இந்நிறுவனம், தொழில் பூங்காக்களை பசுமையாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலும் பராமரிக்க, வனத்துறையுடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டு வருகிறது. மேலும், தொழில் பூங்காவுக்கு அருகில் உள்ள நீர்நிலைகளை புனரமைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது.
அந்தவகையில், செங்கல்பட்டு மாவட்டம், சிறுசேரி சிப்காட் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் உள்ள நாவலுார் ஏரி, முறையான பராமரிப்பு இல்லாமல் இருந்தது. அந்த ஏரியை புனரமைக்கும் பணியை, சில மாதங்களுக்கு முன் சிப்காட் துவக்கியது.
தற்போது, ஏரி துார் வாரப்பட்டு, அதை சுற்றி சுவர் அமைக்கப்பட்டு, சுற்றுச்சூழல் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு, நடைபயிற்சி செல்லவும், சைக்கிள் ஓட்டவும் பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
உணவகம், குழந்தைகள் விளையாட்டு மையம், உடற்பயிற்சி கூடம், பறவைகள் பார்க்கும் மையம் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஏரியில் படகு சவாரியும் துவக்கப்பட உள்ளது. மொத்த திட்ட செலவு, 30 கோடி ரூபாய். விரைவில், இந்த பூங்கா மக்களின் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
இது குறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சிறுசேரி மற்றும் அதை சுற்றிய பகுதிகளில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் உள்ளன. எனவே, நாவலுார் சுற்றுச்சூழல் பூங்கா, தகவல் தொழில்நுட்ப பணியாளர்களின் மன அழுத்தத்தை களையும் வகையில், பல்வேறு வசதிகளுடன் உருவாக்கப்பட்டு உள்ளது' என்றார்.

