/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வழக்கை முடிக்க ரூ.2 லட்சம் லஞ்சம் 'மாஜி' போலீஸ்காரர்களுக்கு சிறை
/
வழக்கை முடிக்க ரூ.2 லட்சம் லஞ்சம் 'மாஜி' போலீஸ்காரர்களுக்கு சிறை
வழக்கை முடிக்க ரூ.2 லட்சம் லஞ்சம் 'மாஜி' போலீஸ்காரர்களுக்கு சிறை
வழக்கை முடிக்க ரூ.2 லட்சம் லஞ்சம் 'மாஜி' போலீஸ்காரர்களுக்கு சிறை
ADDED : ஜூலை 01, 2025 12:22 AM
சென்னை, குற்ற வழக்கை முடித்து வைக்க 2 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட வழக்கில் 'மாஜி3 போலீஸ்காரர்கள் இருவருக்கு, தலா ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அண்ணா நகர் நடுவன்கரை பகுதியைச் சேர்ந்தவர் அபினேஷ்பாபு. சொத்து பிரச்னை சம்பந்தமாக, கடந்த 2008ம் ஆண்டு இரண்டு குற்ற வழக்குகள், சென்னை மத்திய குற்றப்பிரிவால் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்குகளை சிவில் பிரச்னை எனக்கூறி முடித்து விடுவதாக கூறி, அப்போதைய மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த ரஷ்கின், 2 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
இது குறித்து, அபினேஷ்பாபு, சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசாரின் அறிவுரைப்படி லஞ்ச பணத்துடன் 2008ம் ஆண்டு டிச., 17ம் தேதி, மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்துக்கு அபினேஷ்பாபு சென்றுள்ளார்.
அப்போது, அங்கிருந்த இன்ஸ்பெக்டர் ரஷ்கின், பணத்தை ஏட்டு மோகனிடம் கொடுக்கும்படி கூறி உள்ளார்.
அதன்படி லஞ்ச பணத்தை கொடுத்தபோது, அதை பெற்ற ஏட்டு மோகன் மற்றும் லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டர் ரஷ்கின் ஆகியோரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின், இருவரும் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை, சென்னை லஞ்ச வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பிரியா முன் நடந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, இருவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது எனக் கூறி, அவர்களுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை, தலா 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.