/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இதய பாதிப்பு சிறார்களுக்கு இலவச அறுவை சிகிச்சை
/
இதய பாதிப்பு சிறார்களுக்கு இலவச அறுவை சிகிச்சை
ADDED : அக் 26, 2024 07:10 AM

சென்னை : வேலுார் நறுவீ மருத்துவமனை, அடையாறு ஆனந்த பவன் குழுமம் இணைந்து, இதய நோய் பாதிப்புள்ள, 10 சிறார்களுக்கு, இலவச அறுவை சிகிச்சை செய்ய உள்ளன.
சான்றிதழ்
இதுகுறித்து, நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி.வி.சம்பத், அடையாறு ஆனந்தபவன் குழும நிர்வாக இயக்குனர் கே.டி.சீனிவாச ராஜா ஆகியோர் கூறியதாவது:
சிறப்பு சிகிச்சை பிரிவுகளுடன், வேலுார் நறுவீ மருத்துவமனை செயல்படுகிறது. இந்த மருத்துவமனையுடன், அடையாறு ஆனந்த பவன் குழுமம் இணைந்து, இதய நோயால் பாதிக்கப்பட்ட, 5 முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு, இலவச இதய அறுவை சிகிச்சை செய்ய உள்ளது.
பெரு நிறுவனங்களின் சமுதாய பங்களிப்பு திட்டத்தின் கீழ், அறுவை சிகிச்சையின் முழு செலவையும், அடையாறு ஆனந்த பவன் குழுமம் ஏற்றுள்ளது.
இதற்காக, 40 லட்சம் ரூபாயை மருத்துவமனைக்கு வழங்கி உள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தை சேர்ந்தவர்கள், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரின் சான்றிதழ், இதய பாதிப்புக்கான விபரங்களுடன் மருத்துவமனையை அணுக வேண்டும்.
வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்தவர்கள், இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
சிகிச்சை
அவர்களுக்கு, இதய அறுவை சிகிச்சை துறை தலைவர் விநாயக் சுக்லா தலைமையில், டாக்டர்கள், ரே ஜார்ஜ், ஈஸ்வர கார்த்திக், ஜாபர் ஆகியோர் அடங்கிய குழுவினர் சிகிச்சை அளிப்பர்.
இந்த வாய்ப்பை பெற விரும்புவோர், 87540 47796 மொபைல் எண்ணில், இதய அறுவை சிகிச்சை ஒருங்கிணைப்பாளர் பால் செல்வத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.