/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இலவச பயண திட்டம் சொகுசு பஸ்களிலும் விரிவாக்கம்?
/
இலவச பயண திட்டம் சொகுசு பஸ்களிலும் விரிவாக்கம்?
UPDATED : மே 02, 2024 11:13 AM
ADDED : மே 02, 2024 08:03 AM

சென்னை:சொகுசு பேருந்துகளில் பயணிக்கும் பெண் பயணியரை கணக்கெடுக்கும் பணியை, மாநகர போக்குவரத்துக் கழகம் துவங்கி உள்ளது. இதனால், பெண் பயணியருக்கான இலவச பயண திட்டம், சொகுசு பேருந்துகளிலும் கொண்டு வர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தில் 2021 மே 7ம் தேதி, சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் வெற்றி பெற்று, முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றார். பதவியேற்றவுடன் அவர், ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார்.
இதில், 'நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்' என்ற திட்டமும் இடம்பெற்று இருந்தது. இந்த திட்டம், மே 8ம் தேதி முதலே நடைமுறைக்கு வந்தது.
அதன்படி, அரசு போக்குவரத்துக் கழகங்களில் இயக்கப்படும் 9,000 நகர பேருந்துகளில் 7,300க்கும் மேற்பட்ட சாதாரண கட்டண பேருந்துகளில், இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது.
சென்னையில் 1,559 சாதாரண கட்டண பேருந்துகளில், பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். நகர்ப்புறங்களில், வெள்ளை போர்டு உடைய பேருந்துகளிலும், கிராமப்புறங்களில் நகரப் பேருந்துகளிலும், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பெண்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், இத்திட்டத்தை எவ்வித தொய்வுமின்றி செயல்படுத்த, அரசு போக்குவரத்துக் கழகங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.
மாநிலம் முழுதும், தினமும் சராசரியாக, 49 லட்சம் பெண்கள் பயணம் செய்து வருகின்றனர். இதனால், அரசு பேருந்துகளில் பெண் பயணியரின் எண்ணிக்கையும், 62 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்த திட்டத்தை மேம்படுத்த, மாநகர போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, சொகுசு பேருந்துகளில் பயணிக்கும் பெண் பயணியரை கணக்கெடுக்கும் பணியை, மாநகர போக்குவரத்துக் கழகம், நடத்துனர்கள் வாயிலாக துவங்கி உள்ளது.
பிராட்வே - தாம்பரம், கூடுவாஞ்சேரி, கிளாம்பாக்கம், திருவான்மியூர், கேளம்பாக்கம், திருவொற்றியூர், பூந்தமல்லி, சோழிங்கநல்லுார் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில், மாநகர சொகுசு பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.
குறிப்பாக, எந்தெந்த நிறுத்தங்களில் எத்தனை பெண்கள் பயணம் செய்கின்றனர் என்பது குறித்து, தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இதனால், சொகுசு பேருந்துகளிலும் பெண்கள் இலவச பயண திட்டம் விரிவுபடுத்தப்படலாம் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:
சாதாரண கட்டண பேருந்துகளில், பெண்களுக்கான இலவச பயண திட்டம், வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த திட்டத்தை மேலும் சிறப்பாக செயல்படுத்த, நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
மாநகர போக்குவரத்து கழகத்தில் இயக்கப்படும் 3,200 பேருந்துகளில், 50 சதவீத பேருந்துகள், தற்போது சாதாரண கட்டண பேருந்துகளாக இயக்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும், சில வழித்தடங்களில் செல்லும் சொகுசு பேருந்துகளில், பெண் பயணியர் எண்ணிக்கை எவ்வளவு இருக்கிறது? ஏன் அவர்கள் சொகுசு பேருந்துகளில் செல்ல விரும்புகின்றனர்? கூட்ட நெரிசல் காரணமா? உள்ளிட்டவற்றை குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.
அடுத்த சில வாரங்களுக்கு, இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும். அதன் பிறகே இந்த திட்டத்தை சொகுசு பேருந்துகளிலும் விரிவுபடுத்தலாமா? அல்லது சாதாரண கட்டண பேருந்துகளை கூடுதலாக இயக்கலாமா? என்பதை இறுதி செய்து, பேருந்து இயக்கத்தில் சில மாற்றங்கள் கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

