/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஹவுரா விரைவு ரயிலில் ரூ.2 லட்சம் கஞ்சா பறிமுதல்
/
ஹவுரா விரைவு ரயிலில் ரூ.2 லட்சம் கஞ்சா பறிமுதல்
ADDED : ஜூலை 31, 2025 12:47 AM

சென்னை, ஹவுரா விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட நான்கு கிலோ கஞ்சாவை, ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.
மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் இருந்து, சென்னை எழும்பூர் ரயில் நிலையம் 7வது நடைமேடைக்கு, நேற்று முன்தினம் இரவு விரைவு ரயில் வந்து நின்றது. பயணியர் இறங்கிய பின், போலீசார் வழக்கமான பரிசோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு பெட்டியில் கேட்பாரற்று ஒரு பை கிடந்தது. ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், பையை சோதனை செய்தனர். இதில், இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான நான்கு கிலோ பச்சை கஞ்சா இருப்பது தெரியவந்தது. கஞ்சா கடத்தி வந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திரிபுரா வாலிபர் கைது
அண்ணனுார் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக, அம்பத்துார் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார், கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, ஆட்டோ ஸ்டாண்ட் அருகே, சந்தேகத்திற்கு இடமான வகையில் பையுடன் சுற்றிதிரிந்த வாலிபரை சோதனை செய்தனர். அதில், கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிந்தது. விசாரணையில், திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த அபுல் காசிம், 40, என தெரிந்தது.
அவர், திரிபுரா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து, அம்பத்துார் தொழிற்பேட்டையில் உள்ள வடமாநில வாலிபர்களுக்கு விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரிடம் இருந்து, 2.40 லட்சம் ரூபாய் மதிப்புடைய, 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, நேற்று மாலை சிறையில் அடைத்தனர்.