காத்திருப்பால் பணி பாதிப்பு குப்பை லாரி ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்
காத்திருப்பால் பணி பாதிப்பு குப்பை லாரி ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 25, 2026 07:43 PM

கொடுங்கையூர்: கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் குப்பைகளை இறக்குவதற்கு லாரிகள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலையை கண்டித்து, செங்கொடி சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகளவிலான குப்பைகள், ‘காம்பக்டர்’ எனும் இயந்திரம் மூலம் அழுத்தப்பட்டு, குப்பை அளவை சுருக்கி சேகரிக்கப்படுகின்றன. இவற்றை, கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் இறக்குவதற்கு, அதிகபட்சம் நான்கு மணி நேரம் வரை லாரிகள் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் குப்பை சேகரிக்கும் பணியில் தாமதம் ஏற்படுவதுடன், உணவு உண்ணவும், பணியை உரிய நேரத்தில் முடிக்கவும் முடியாமல் ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர்.
இதை கண்டித்து சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தின் ஓட்டுநர் பிரிவு சார்பில், கொடுங்கையூர் குப்பை வளாகம் முன் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்கத்தினர் கூறியதாவது:
குப்பைகளை இறக்குவதற்கான கூடுதல் ‘பாயின்ட்’களை அமைத்து, லாரிகளின் காத்திருப்பு நேரத்தை குறைக்க வேண்டும்.
தொழிலாளர்களுக்கு காலணி, முகக்கவசம், பாதுகாப்பு கண்ணாடி, தொப்பி, மழைக்கோட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதுடன், மருத்துவ முகாம்களும் நடத்த வேண்டும். மழைக்காலத்திற்கு முன் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆர்ப்பாட்டத்தால், வளாகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் குப்பை லாரிகள் நீண்ட வரிசையில் நின்றதால், அப்பகுதியில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
