/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'காஸ்' சிலிண்டர் வெடித்து விபத்து 20க்கும் மேற்பட்ட குடிசை தீக்கிரை
/
'காஸ்' சிலிண்டர் வெடித்து விபத்து 20க்கும் மேற்பட்ட குடிசை தீக்கிரை
'காஸ்' சிலிண்டர் வெடித்து விபத்து 20க்கும் மேற்பட்ட குடிசை தீக்கிரை
'காஸ்' சிலிண்டர் வெடித்து விபத்து 20க்கும் மேற்பட்ட குடிசை தீக்கிரை
ADDED : மே 27, 2025 12:42 AM

வியாசர்பாடி, வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர் பிரதான சாலையொட்டி, 200க்கு மேற்பட்ட குடிசைகளில் ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர்.
நேற்று மாலை குடிசைகளில் இருந்து கரும்புகை வெளியேறிய நிலையில், தீ மளமளவென அடுத்த குடிசைகளுக்கு பரவி, கொழுந்து விட்டு எரிய துவங்கியது. அனைவரும் பதறியடித்து வெளியேறினர்.
தகவலறிந்து, வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, வ.உ.சி.நகர், எஸ்பிளனேடு உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து, ஆறு வண்டிகளில் 60க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீயணைப்பு வாகனங்களில் தண்ணீர் தீர்ந்த நிலையில், குடிநீர் நிலையங்களில் இருந்து, டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. பின் தீயணைப்பு வீரர்கள், இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில், 20க்கும் மேற்பட்ட குடிசை எரிந்து சாம்பலாயின. வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் தீக்கிரையாயின. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
எம்.கே.பி.நகர் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், காஸ் கசிவு காரணமாக குடிசையில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், மளமளவென பரவி சிலிண்டர் வெடித்து மற்ற வீடுகளுக்கும் தீ பரவியது தெரியவந்தது.
தீ விபத்தில் பாதிக்கப்பட்டு வீடுகள், உடைமைகளை இழந்த மக்களை, அருகில் உள்ள மாநகராட்சி உயர்நிலை பள்ளியில் தங்க வைத்து, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை எம்.எல்.ஏ., ஆர்.டி.சேகர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் செய்து தந்தனர். இந்த தீ விபத்தால் வியாசர்பாடியில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.