/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'பொது பயன்பாட்டு பயண அட்டை 3 மாதத்தில் நடைமுறைக்கு வரும்'
/
'பொது பயன்பாட்டு பயண அட்டை 3 மாதத்தில் நடைமுறைக்கு வரும்'
'பொது பயன்பாட்டு பயண அட்டை 3 மாதத்தில் நடைமுறைக்கு வரும்'
'பொது பயன்பாட்டு பயண அட்டை 3 மாதத்தில் நடைமுறைக்கு வரும்'
ADDED : அக் 18, 2024 12:17 AM
சென்னை, ''மாநகர பஸ்களில், தேசிய பொது இயக்க அட்டையில், டிக்கெட் பெறும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும்,'' என, போக்குவரத்து துறை செயலர் பணீந்திர ரெட்டி தெரிவித்துஉள்ளார்.
சென்னையில் மாநகர பஸ், மெட்ரோ ரயில், மின்சார ரயில் ஆகிய, அனைத்து பொது போக்குவரத்து வாகனங்களிலும் பயணிக்க, என்.சி.எம்.சி., எனப்படும் தேசிய பொது இயக்க அட்டையை, ஒரே பயண அட்டையை பயன்படுத்த முயற்சி நடந்து வருகிறது.
இதன் முன்னோட்டமாக, எஸ்.பி.ஐ., வங்கி உதவியுடன், கடந்த ஏப்ரல் முதல் மாநகர பஸ்களில், நவீன டிக்கெட் கருவி வாயிலாக டிக்கெட் வழங்கப்படுகிறது.
இந்த கருவியில், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, க்யூ.ஆர்., குறியீடு உள்ளிட்டவை வாயிலாக, பணம் பெற வசதிகள் உள்ளன.
இந்நிலையில், 'சென்னை மாநகர போக்குவரத்து கழகம், அரசு விரைவு போக்குவரத்து கழகங்களை தொடர்ந்து, விழுப்புரம் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழகங்களிலும், நவீன கருவி வாயிலாக டிக்கெட் வழங்கும் முறை அமலுக்கு வருகிறது' என்று, அரசு போக்குவரத்து கழகம், சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இந்த பதிவை சுட்டிக்காட்டி, போக்குவரத்து துறை செயலர் பணீந்திர ரெட்டி வெளியிட்ட பதிவில், ''அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும், மூன்று மாதங்களுக்குள் டிக்கெட் கருவிகள் முழுமையாக வழங்கப்படும்.
மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைந்து, மாநகர பஸ்களில், என்.சி.எம்.சி., அட்டை விரைவில் அறிமுகம் செய்யப்படும்,'' என்று கூறியுள்ளார்.
மாதாந்திர பயண அட்டை
வரும் 24 வரை பெறலாம்!
ஆயுதபூஜை மற்றும் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு, 11 முதல் 15ம் தேதி வரை, மாநகர போக்குவரத்து கழக மாதாந்திர டிக்கெட் விற்பனை மையங்களுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டது. எனவே, மாணவர்கள், பொதுமக்கள் நலன் கருதி, அனைத்து பயண அட்டைகளும், இந்த மையங்களில் வரும் 24ம் தேதி வரை விற்கப்படும்.
- ஆல்பி ஜான் வர்கீஸ், இயக்குனர், எம்.டி.சி.,