/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ராட்சத குழாய் உடைந்து குடிநீர் வீண்
/
ராட்சத குழாய் உடைந்து குடிநீர் வீண்
ADDED : ஜன 18, 2026 05:35 AM

திருவொற்றியூர்: திருவொற்றியூரில், ராட்சத குழாய் உடைந்து, பல்லாயிரக்கணக்கான லிட்டர் குடிநீர், சாலையில் ஆறாக ஓடி வீணானது.
திருவொற்றியூர் மண்டலத்தின் 14 வார்டுகளில், 88,000 குடியிருப்புகளில் வசிக்கும், 3 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு, புழல் ஏரியில் இருந்து, தினசரி 10 முதல் 14 எம்.எல்.டி., குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு, ராட்சத குழாய்கள் வழியாக, வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று காலை, திருவொற்றியூர் மாட்டு மந்தை மேம்பாலம் அருகேயுள்ள ரயில்வே குளத்தையொட்டி செல்லும் ராட்சத குழாயின் வால்வு பகுதியில், திடீரென உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் பீய்ச்சி அடித்து வெளியேறியது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வெளியேறிய குடிநீர், சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
இது குறித்து தகவல் அறிந்த குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், சம்பவ இடத்தில் முகாமிட்டு, குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்தனர்.
ராட்சத குழாய் சாலையோரத்தில் உள்ள நிலையில், அங்கு கனரக வாகனங்கள் நிறுத்துவதால் அழுத்தம் ஏற்பட்டு, குழாயில் உடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

