/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கொடுக்கல் -- வாங்கல்: செக்யூரிட்டி அடித்துக்கொலை
/
கொடுக்கல் -- வாங்கல்: செக்யூரிட்டி அடித்துக்கொலை
ADDED : நவ 05, 2024 12:21 AM

பொன்னேரி, பழவேற்காடு அருகில் உள்ள தாங்கல்பெரும்புலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராஜ், 45. இவர், அதே பகுதியில் உள்ள தனியார் இறால் பண்ணையில், காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.
இரவு நேர பணிக்கு செல்லும் போது, பணி முடிந்து காலையில் வீடு திரும்புவது வழக்கம். கடந்த, 2ம் தேதி இரவு பணிக்குச் சென்ற சிவராஜ், அடுத்த நாள் காலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. மொபைல் போனிலும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில், குடும்பத்தினர் இறால் பண்ணைக்குச் சென்று விசாரித்தனர்.
அங்கு பணிபுரியும் வடமாநில இளைஞர்கள், சிவராஜ் நள்ளிரவு, 2:00 மணியளவில் சென்றதாக கூறி உள்ளனர். அதேசமயம், அவரது காலணி மற்றும் மொபைல் போன் அங்கு இருந்துள்ளது.
இதனால் சந்தேகமடைந்த சிவராஜ் மனைவி பவானி, நேற்று முன்தினம் காட்டூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
நேற்று காலை, சந்தேகத்தின் அடிப்படையில், இறால் பண்ணையில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் இருவரை பிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
இதில், 2ம் தேதி இரவு சிவராஜுக்கும், வடமாநில இளைஞர்களுக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை ஏற்பட்டு உள்ளது.
அப்போது, சிவராஜை இரும்பு ராடால் அடித்துக் கொன்று, உடலை மறைத்து வைத்திருந்தது தெரிந்தது.
இதையடுத்து, போலீசார் சிவராஜின் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

