/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கழிவுநீர் ஓடையாக மாறிய கோமதிபுரம் பிரதான சாலை
/
கழிவுநீர் ஓடையாக மாறிய கோமதிபுரம் பிரதான சாலை
ADDED : அக் 13, 2025 05:07 AM

திருநின்றவூர்: கோமதிபுரம் 5வது பிரதான சாலையில், சாலையில் வழிந்தோடி தேங்கும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
திருநின்றவூர் நகராட்சி, 18வது வார்டு, கோமதிபுரம் ஐந்தாவது பிரதான சாலையில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 15 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட இந்த சாலையில், வடிகால்வாய் வசதி இல்லை.
பொதுமக்கள் சாலையோரம் தோண்டப்பட்ட கால்வாயை, காலங்காலமாக வடிகால் போல் பயன்படுத்தி வந்தனர்.
சிலர் கழிவு நீரை அதில் வெளியேற்றி வருவதால், சாலையில் வழிந்தோடி தேங்குகிறது.
இந்நிலையில், ஐந்தாவது பிரதான சாலையில் இருந்த வடிகாலை, மண் மற்றும் சிமென்ட் கலவையால் சிலர் மூடிவிட்டனர். இதனால், வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் வெளியேற வழியின்றி சாலையில் தேங்கி உள்ளது.
குறிப்பாக, பிரதான சாலை, ஐந்து முதல் ஒன்பதாவது குறுக்கு தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால், பகுதிமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாமல், மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
இது குறித்து கவுன்சிலரிடம் பலமுறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நகராட்சி நிர்வாகமும், சாலையில் உள்ள சேற்றை அகற்றி 'பிளீச்சிங்' பவுடர் தெளிக்க, எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இந்த பிரச்னைக்கு தீர்வு காண வடிகால் அமைத்து, புதிதாக சாலை அமைக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'கழிவுநீர் பிரச்னைக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கழிவுநீரை விதிமீறி சாலையில் வெளியேற்றுவோருக்கு அபராதம் விதிக்கப்படும்' என தெரிவித்தனர்.