/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'மெட்ரோ' வழித்தடத்தில் கட்டடங்களுக்கு 3.25 மடங்கு எப்.எஸ்.ஐ., தருகிறது அரசு போக்குவரத்து சார்ந்த வளர்ச்சி கொள்கையில் சேர்ப்பு
/
'மெட்ரோ' வழித்தடத்தில் கட்டடங்களுக்கு 3.25 மடங்கு எப்.எஸ்.ஐ., தருகிறது அரசு போக்குவரத்து சார்ந்த வளர்ச்சி கொள்கையில் சேர்ப்பு
'மெட்ரோ' வழித்தடத்தில் கட்டடங்களுக்கு 3.25 மடங்கு எப்.எஸ்.ஐ., தருகிறது அரசு போக்குவரத்து சார்ந்த வளர்ச்சி கொள்கையில் சேர்ப்பு
'மெட்ரோ' வழித்தடத்தில் கட்டடங்களுக்கு 3.25 மடங்கு எப்.எஸ்.ஐ., தருகிறது அரசு போக்குவரத்து சார்ந்த வளர்ச்சி கொள்கையில் சேர்ப்பு
ADDED : ஆக 27, 2025 12:18 AM
சென்னை, சென்னை பெருநகரில், மெட்ரோ ரயில், புறநகர் மின்சார ரயில் வழித்தடங்களில், கட்டப்படும் கட்டடங்களுக்கு, 3.25 மடங்கு வரை தளபரப்பு குறியீட்டை அனுமதிக்க, அரசு திட்டமிட்டுள்ளது.
சென்னையில் பொது போக்குவரத்து மேம்பாட்டுக்காக, மெட்ரோ ரயில் திட்டம் இரண்டு வழித்தடங்களில் செயல்பாட்டில் உள்ளது. மேலும், மூன்று வழித்தடங்களில் பணிகள் நடந்து வருகின்றன.
இத்துடன், மின்சார ரயில், மேம்பால ரயில் சேவையும் பயன்பாட்டில் உள்ளது. இதில், பொது போக்குவரத்து உள்ள பகுதிகளில் மக்கள் அதிகமாக குடியேறுவதை ஊக்குவிக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, மெட்ரோ ரயில் செல்லும் வழித்தடங்களை ஒட்டிய பகுதிகளில் உள்ள கட்டடங்களில், எப்.எஸ்.ஐ., எனப்படும் தளபரப்பை குறியீட்டை கூடுதலாக அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்கான ஆய்வை மேற்கொண்ட தனியார் நிறுவனம் அளித்த பரிந்துரையை, தமிழக அரசுக்கு, சி.எம்.டி.ஏ., அனுப்பியது. இந்த விஷயத்தில், சில ஆண்டுகளாக இறுதி முடிவு எடுக்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில், சென்னையில் போக்குவரத்து சார்ந்த வளர்ச்சிக்கான கொள்கை உருவாக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சென்னை பெருநகரில், மெட்ரோ ரயில் திட்டத்தின் ஐந்து வழித்தடங்கள், கடற்கரை - வேளச்சேரி, வேளச்சேரி - பரங்கிமலை இடையிலான மேம்பால ரயில் வழித்தடங்கள், சென்னை கடற்கரை - வண்டலுார், சென்னை கடற்கரை - மீஞ்சூர், சென்னை சென்ட்ரல் - திருநின்றவூர் ஆகிய வழித்தடங்களை ஒட்டிய பகுதிகளில் கூடுதல் எப்.எஸ்.ஐ., வழங்கப்பட உள்ளது.
இத்துடன், அண்ணா சாலையில் ஓமந்துாரார் அரசின் தோட்டம் - கிண்டி கத்திபாரா, பழைய மாமல்லபுரம் சாலையில், எஸ்.ஆர்.பி., டூல்ஸ் - சோழிங்கநல்லுார் வழித்தடங்களில் கட்டடங்களுக்கு தளபரப்பு குறியீடு அதிகரிக்கப்பட உள்ளது.
இந்த வழித்தடங்களில் இரண்டு பக்கத்திலும், 500 மீட்டர் அதாவது, 1,640 அடி வரையிலான பகுதிகளில் கட்டப்படும் கட்டடங்களுக்கு, 3.25 மடங்கு கூடுதல் தளபரப்பு குறியீடு அனுமதிக்கப்படும். தற்போது, நிலத்தின் பரப்பளவில் இரண்டு மடங்கு அளவுக்கு அனுமதி உள்ளது.
புதிய திட்டத்தின்படி, 3.25 மடங்கிற்கு மேல் கூடுதலாக தேவைப்பட்டால், கட்டுமான நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் செலுத்தி, 1.6 மடங்கு தளபரப்பு குறியீட்டை பெறலாம்.
இந்த புதிய வழிமுறை வாயிலாக அரசுக்கு, மூன்று ஆண்டுகளில், 1,429 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சென்னைக்கான போக்குவரத்து சார்ந்த வளர்ச்சி குறித்த கொள்கையில், இந்த விபரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இது தொடர்பான முறையான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
***