ADDED : மார் 26, 2026 11:07 PM
சென்னை: பறவை காய்ச்சல் கட்டுக்குள் வந்துள்ளதை அடுத்து, கிண்டி சிறுவர் பூங்கா, இன்று முதல் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுகிறது.
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கிண்டி சிறுவர் பூங்கா, 22 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இங்கு பெரிய கூண்டுகள் அமைக்கப்பட்டு, வேடந்தாங்கலில் இருந்து கொண்டு வரப்பட்ட 200க்கும் மேற்பட்ட பறவைகள், பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த, 50க்கும் மேற்பட்ட பறவைகள் திடீரென இறந்தன. பறவை காய்ச்சல் பாதிப்பால் இறந்தது தெரிய வந்ததையடுத்து, தொற்று பரவல் நடவடிக்கை மேற்கொள்ள, மார்ச் 20ம் தேதி முதல் சிறுவர் பூங்கா மூடப்பட்டது.
தொடர் கண்காணிப்பை அடுத்து, பறவை காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளதால், இன்று முதல் பார்வையாளர்கள் அனுமதிக்காக, பூங்கா மீண்டும் திறக்கப்பட உள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது.
