/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பஸ் - ரயில் நிலையங்களை இணைக்க நடைமேம்பாலம் ரூ.20.75 கோடியில் மேம்படுது கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலை
/
பஸ் - ரயில் நிலையங்களை இணைக்க நடைமேம்பாலம் ரூ.20.75 கோடியில் மேம்படுது கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலை
பஸ் - ரயில் நிலையங்களை இணைக்க நடைமேம்பாலம் ரூ.20.75 கோடியில் மேம்படுது கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலை
பஸ் - ரயில் நிலையங்களை இணைக்க நடைமேம்பாலம் ரூ.20.75 கோடியில் மேம்படுது கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலை
ADDED : மே 16, 2025 12:26 AM

சென்னை, சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலையில் பஸ், ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில், புதிதாக நடை மேம்பாலம் அமைக்கப்படுகிறது. கிண்டி பேருந்து நிலைய பகுதியில், சாலையை 100 அடி அகலத்தில் மாற்றவும் மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
மின்சார ரயில், மெட்ரோ ரயில், பேருந்து வழித்தடம் என, பொது போக்குவரத்திற்கான முக்கிய மையமாக கிண்டி உள்ளது.
அண்ணா சாலை, அடையாறு பகுதியில் இருந்து தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேடு நோக்கி செல்லும் பேருந்துகள், கிண்டி ரயில் நிலையம் அண்ணா சாலை சந்திப்பு வழியாக சென்றன.
கடந்த 2013ல் மெட்ரோ ரயில் பணியால், அனைத்து மாநகர பேருந்துகளும், ரேஸ் கோர்ஸ் வழியாக திருப்பி விடப்பட்டன. தற்போது, நிரந்தர வழித்தடமாகியுள்ளது.
இச்சாலை குறுகியதாக உள்ளதால், வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் பரிதவிக்கின்றனர்.
இந்நிலையில், பேருந்து பயணியர், மெட்ரோ ரயில் நிலையம், புறநகர் மின்சார ரயில் நிலையங்களுக்கு செல்லும் வகையில், கிண்டி ரேஸ் சாலையில், புதிதாக நடைமேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.
தவிர, பேருந்து நிலைய பகுதி சாலையை, 100 அடி அகலமாக மாற்றவும் மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக, மாநில உள்கட்டமைப்பு நிதியில் இருந்து, 13.83 கோடி ரூபாய், மாநகராட்சியின் மூலதன நிதியில் இருந்து, 6.92 கோடி ரூபாய் என மொத்தம், 20.75 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலையை ஒட்டி பேருந்து நிலையம் உள்ளது. இப்பகுதி சாலை குறுகியதாக இருப்பதால், வாகன நெரிசல் அதிகரிக்கிறது.
தவிர, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் நிலையம் செல்ல, சாலையை கடக்க பயணியர் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இவர்களின் சிரமத்தை போக்க, ரேஸ் கோர்ஸ் சாலை, 20.70 கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்து மேம்படுத்தப்படுகிறது. இதற்காக நில ஆர்ஜிதம், ஆக்கிரமிப்பு அகற்றம் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.
ரேஸ் கோர்ஸ் சந்திப்பில் ஏறினால், அண்ணா சாலையில் இறங்கும் வகையில் நடைமேம்பாலம், மாற்றுத்திறனாளிகளுக்காக சாய்வு தளம், மின்துாக்கி, கட்டடக்கலை அலங்கார விளக்குகள் போன்ற வசதிகள் அமைய உள்ளன.
இத்திட்டத்தால், பாதுகாப்பான பாதசாரிகள் பயணம் செய்ய முடியும். வாகன ஓட்டிகளுக்கும் சாலை பாதுகாப்பு, முறையான வாகன நிறுத்தம், ஒழுங்குபடுத்தப்பட்ட கடைகள் அமையும்.
தவிர, குடிநீர் - கழிவுநீர் குழாய், மின்சாரம், தொலைத்தொடர்பு கேபிள் செல்ல தனி கட்டமைப்பு, இயற்கை எரிவாயு செல்லும் தனி குழாய் அமைக்கப்படும். விரைவில் இப்பணி துவங்க உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.