/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மேல் கால ஸ்வரத்தில் குருசரண் அசத்தல்
/
மேல் கால ஸ்வரத்தில் குருசரண் அசத்தல்
ADDED : ஜன 12, 2024 01:00 AM

மதி மயக்கும் குரலில், மயிலாப்பூர் ராகசுதா அரங்கில் கச்சேரியை நிகழ்த்தினார் சிக்கில் குருசரண்.
பரசு ராகத்தில், மூலாதார மூர்த்தியை போற்றி, தமிழில் அமைந்த இனிமையான ஒரு வர்ணத்தை பாடினார். இவ்வர்ணத்தை, வாசுதேவநல்லுார் சுப்பையா பாகவதர் இயற்றிஉள்ளார்.
தொடர்ந்து, சஹானா ராகத்தில் ஒரு சிறிய ஆலாபனை. இதில், ஆண்டாள் அருளிய திருப்பாவையான 'குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில் மேல்' எனும் ஆதி தாளத்தில் அமைந்த பாடலை பாடினார்.
பின், அருணாச்சல கவி இயற்றிய வசந்தா ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'கண்டேன் சீதையை' பாடலை துவங்கினார். இதில், இலங்கை தீவில் சீதையை கண்ட அனுமன், அதை ராமனிடம் உரைக்கும் படியாக அமைந்திருக்கும்.
இப்பாடலில், 'கண்டேன் சீதையை' என்ற வரிகளுக்கு மேல் காலத்தில் ஸ்வரம் இசைத்தது அருமை. முக்கியமாக 'ஸரி நிஸ் தநி மத' எனும் அபிப்பிராயம் அற்புதம்.
தொடர்ந்து, பாலஹம்ச ராகத்தில் ஆலாபனை செய்து, அரங்கத்தில் ஓர் அமைதி சூழலை நிலவுச் செய்தார். இதே ராகத்தை வயலினில் ராஜிவ் வாசிப்பும், அவருக்கு கைதட்டல்களை பெற்று தந்தது.
இந்த ராகத்தில், தியாகராஜர் இயற்றிய ஆதி தாளத்தில் அமைந்த 'இககா வலசா' கீர்த்தனையை பாடினார்.
இங்கு சரணத்தில் 'ஸேமாதி ஸுபமுலனு' வரிகளுக்கு ஸ்வரம் பாடினார். இங்கு 'த, தப தஸ்நித ப, பம பநிதப ம, ம ம ரிமகஸ ரிம' என்ற அபிப்ராயம் ஈர்க்கும் வண்ணம் அமைந்தது.
கண்ட சாபு தாளத்தில், சாரங்கா ராகத்தில் அமைந்த 'நீ பாடனே கான' கிருதியை பாடினார்.
ரிஷபப்பிரியா ராகத்தில் அற்புதமான பிரியோகங்களால் ஆலாபனை செய்து, இதே ராகத்தில் ஆதி தாளத்தில் அமைந்த கோடீஸ்வர அய்யர் இயற்றிய 'கனநய தேசிக' கீர்த்தனையை அற்புதமாக கையாண்டார். இதில், 'நீயே கர்த்தா' எனும் வரிகளை நிரவல் செய்தார்.
மிருதங்கம் திருவனந்தபுரம் பாலாஜி, கஞ்சிரா ஸ்ரீராம் கிருஷ்ணன், தங்களது தனி திறமைகளை வெளிப்படுத்தினர். மோராக்கோர்வைகள் அற்புதம்.
நிறைவாக 'தொம்தனன திரன திரன திரனா' எனும் விறுவிறுப்பான தில்லானாவை பாடி உற்சாகமூட்டியதோடு, 'ஸ்ரீ ராமச்சந்திரனுக்கு ஜெய' எனும் மங்களம் பாடி, கச்சேரியை நிறைவு செய்தார்.
வித்தியாசமான ராகங்கள், வித்தியாசமான கீர்த்தனைகளை கையாண்டு, வழக்கம்போல் தன் ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டினார்.
- சத்திரமனை
ந.சரண்குமார்.