ADDED : மே 13, 2025 12:31 AM
சென்னை :திருவல்லிக்கேணி எல்லீஸ் சாலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து குட்கா வாங்கி வந்து, மர்ம நபர் ஒருவர் விற்று வருவதாக, திருவல்லிக்கேணி குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, எல்லீஸ் சாலையில் வெயிலுக்கு குடில் போட்டு, பிளாஸ்டிக் பொருட்கள் விற்று வந்த, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ரவி, 35, என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அவரின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
இவர் குட்கா விற்பனையில் ஈடுபடுவதை உறுதி செய்தனர். இதையடுத்து, நேற்று ரவியை பிடித்து விசாரித்தனர். அப்போது, ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வருவது போல நடித்து, எல்லீஸ் சாலையில் குட்கா விற்பனையில் ஈடுபட்டு வந்ததை ஒப்புக்கொண்டார்.
போலீசார் ரவியை கைது செய்து, பதுக்கி வைத்திருந்த, எட்டரை கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.