ADDED : அக் 24, 2026 08:26 PM
திருவொற்றியூர்: திருவொற்றியூர் சங்கர வித்யா கேந்திரா பள்ளி, ‘உலோ’ நிறுவனத்துடன் இணைந்து, அதன் வளாகத்தில் கணினி ஹேக்கத்தான் போட்டியை, இன்று (அக்.,24) நடத்தின.
மாணவ – மாணவியரின் தொழில்நுட்ப திறன், படைப்பாற்றல் மற்றும் இணையதள உருவாக்கும் திறன்களை ஊக்குவிக்கும் வகையில், ‘சங்கரா டெக்போர்ஜ்’ என்ற பெயரில், இப்போட்டியை நடத்தின.
இதில், வடசென்னையில் இருந்து 18 பள்ளிகளைச் சேர்ந்த, 111 மாணவ – மாணவியர் பங்கேற்றனர். அதன்படி, 4, 5, 6 ஆகிய வகுப்புகளுக்கு, கணினி சார்ந்த ‘ஸ்கார்ட்ஜ் – கேன்வா’ பிரிவிலும், 7ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, பைதான், வெப் டெவலப்மென்ட் மற்றும் கேன்வா ஆகிய பிரிவுகளில், போட்டிகள் நடந்தன.
இதில், 4, 5, 6ம் வகுப்பு மாணவர்களுக்கான பிரிவில், விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவர் லத்திஷ், 12, பிளஸ் 2க்கான பிரிவில் இதே பள்ளி மாணவி வந்தனா, 16; மற்றும் 7, 8, 9ம் வகுப்பு மாணவர்களுக்கான பிரிவில், கவி பாரதி வித்யாலயா பள்ளி மாணவி வெனிஷ்கா, 13, உள்ளிட்டோர், முதல் பரிசு பெற்றனர். அவர்களுக்கு 5,000 ரூபாய் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இரண்டாம், மூன்றாம் பரிசு பெற்றவர்களுக்கு முறையே, 2,000, 1,000 ரூபாய் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், சங்கர வித்யா கேந்திரா பள்ளி தாளாளர் ரங்கநாதன், நிர்வாக இயக்குநர் அவந்திகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
