ADDED : பிப் 13, 2024 12:23 AM

பூந்தமல்லி, பூந்தமல்லி நகராட்சியில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள, தெருவோர வியாபாரிகளுக்கு அரசு சார்பில், 30 கடைகள் ஒதுக்கப்பட்டன.
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள தெருவோர வியாபாரிகளுக்கு வழங்கப்படும் இந்த கடைகள், ஓராண்டுக்கு மேலாக பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தில், வெட்ட வெளியில் வைக்கப்பட்டு துருப்பிடித்து முகப்புகள் உடைந்து பாழாகி வந்தன.
நகராட்சியின் இந்த செயல்பாடுகள் வியாபாரிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இது குறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, 30 கடைகளும் சீரமைக்கப்பட்டு, 'பங்க்' கடை நடத்துவோர் மற்றும் சாலையோர டிபன் கடைக்காரர்களுக்கு வழங்கப்பட்டன.
கடந்த ஓராண்டுக்கு மேலாக, பாழாகி வந்த கடைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள், 'தினமலர்' நாளிதழுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.