/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை, சுற்றியுள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை தீவிரம் மிரட்டும் கனமழை!:அதிகாரிகளுடன் துணை முதல்வர், அமைச்சர் நேரு ஆலோசனை
/
சென்னை, சுற்றியுள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை தீவிரம் மிரட்டும் கனமழை!:அதிகாரிகளுடன் துணை முதல்வர், அமைச்சர் நேரு ஆலோசனை
சென்னை, சுற்றியுள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை தீவிரம் மிரட்டும் கனமழை!:அதிகாரிகளுடன் துணை முதல்வர், அமைச்சர் நேரு ஆலோசனை
சென்னை, சுற்றியுள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை தீவிரம் மிரட்டும் கனமழை!:அதிகாரிகளுடன் துணை முதல்வர், அமைச்சர் நேரு ஆலோசனை
ADDED : நவ 13, 2024 02:17 AM

சென்னை:''சென்னையில் கனமழையை எதிர்கொள்ளும் வகையில், மோட்டார் பம்புகள் 21 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளன,'' என, துணை முதல்வர் உதயநிதி கூறினார். ''மழை நல்லது. இரண்டு நாள் பொறுத்துக்கொள்ளுங்கள். ஏரிகளுக்கு தண்ணீர் தேவை,'' என, அமைச்சர் நேரு கூறியுள்ளார்.
தென்மேற்கு வங்கக் கடலில், நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில், அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என, வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது.
சென்னையில் நேற்று முன்தினம் இரவு, விட்டு விட்டு கனமழை பெய்தது. காலை வரை, சராசரியாக 3.60 செ.மீ., மழை பெய்துள்ளது. தென் சென்னையில் 5.5 செ.மீ., பெருங்குடியில் 7.35 செ.மீ., மழை பெய்துள்ளது.
இரவு முழுவதும் பெய்த மழையால் தேங்கிய நீர், மோட்டார்கள் வாயிலாக உடனுக்குடன் வெளியேற்றப்பட்டது.
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையடுத்து முன்னேற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
துணை முதல்வர் உதயநிதி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு உள்ளிட்டோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
பின், உதயநிதி கூறியதாவது:
சென்னையில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற 1,194 மோட்டார் பம்புகள், 158 'சூப்பர் சக்கர்' இயந்திரங்கள், 524 'ஜெட் ராடிங்' இயந்திரங்கள் தயாராக உள்ளன.
கடந்த அக்டோபர் மாதம் பெய்த மழைக்கு பயன்படுத்தியதைவிட, 21 சதவீதம் அதிகமாக்கி இருக்கிறோம். கடந்த மழைக்கால அனுபவத்தின் அடிப்படையில், கண்காணிப்பு அதிகாரிகள் அறிக்கையின்படி, கூடுதல் மோட்டார்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாநகராட்சி சார்பில், 120 உணவு தயாரிப்பு மையங்கள் உட்பட 329 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. கடந்த மழைக்கு, 98 உணவு தயாரிப்பு மையங்கள் இருந்தன. சென்னையில் கணேசபுரம் தவிர, 21 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து பாதிப்பு இல்லாத நிலை தொடர்கிறது. கணேசபுர சுரங்கப்பாதையில் பணி நடப்பதால் மூடப்பட்டுள்ளது.
மாநகராட்சி கமிஷனர், அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மேயர், துணை மேயர், கவுன்சிலர்கள் என, அனைவரும் களத்தில் இருக்கிறோம்.மக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்த, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
மழைநீர் கால்வாய்களில் துார்வாரும் பணி நடக்கிறது. அப்பணிகளை விரைவில் முடித்து விடுவோம். சமூக ஊடகங்களில் வரும் புகார்கள் குறித்து, உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுவரை பெரியளவில் புகார்கள் ஏதும் வரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அதேபோல், ஆவடியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் நேரு அளித்த பேட்டி:
செம்பரம்பாக்கம், புழல், பூண்டி போன்ற ஏரிகளின் நீர்வரத்து பகுதிகளில் மழை பெய்யும் என, 'வெதர்மேன்' அறிக்கை கூறுகிறது.
இதன் வாயிலாக ஏரிகள் முழுமையாக நிரம்பி, குடிநீர் பற்றாக்குறை இல்லாமல் இருக்கும். அதற்கு தான் முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.
'மழை வருது, மழை வருது' வெள்ளத்தை எப்போது வெளியேற்ற போகிறீர்கள் என, நிருபர்கள் கேள்வி எழுப்புகின்றனர். முதலில், ஏரிகளில் நீர் நிரம்பினால் தான் குடிநீர் பிரச்னை தீரும்.
எனவே, இரண்டு நாட்கள் மழையால் வரும் அசவுகரியங்களை பொதுமக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான், ஆண்டு முழுதும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.
இவ்வாறு அமைச்சர் நேரு கூறினார்.
பப்புள்ஸ்
நேரு:
மழை நல்லது. ஏரிகள் நிரம்பணும்...
இரண்டு நாள் பொறுத்துக்கோங்க...
-
உதயநிதி:
21 சதவீதம் அளவிற்கு
முன்னேற்பாடு செய்திருக்கோம்
பயப்பட தேவையில்லை