கனரக வாகனங்களை மடக்கிய எம்.எல்.ஏ., உரிய ஆவணங்கள் இருந்ததால் விடுவிப்பு
கனரக வாகனங்களை மடக்கிய எம்.எல்.ஏ., உரிய ஆவணங்கள் இருந்ததால் விடுவிப்பு
ADDED : செப் 04, 2026 06:30 PM
நங்கநல்லுார், செப். 5– -
ஜல்லி, மணல் ஏற்றி சென்ற கனரக வாகனங்களை பிடித்த எம்.எல்.ஏ., அவற்றை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். உரிய ஆவணங்கள் இருந்ததால் போலீசார் விடுவித்தனர்.
திரிசூலத்தில் நங்கநல்லுார், பி.வி. நகர் வழியாக மீனம்பாக்கம் நோக்கி நேற்று முன்தினம் இரவு கனரக வாகனங்கள் தொடர்ந்து சென்றன.
அப்போது, கனமழை, காற்றால் சாய்ந்த மரக்கிளைகளை அகற்றும் பணியை பார்வையிட வந்த ஆலந்துார் எம்.எல்.ஏ., எம். ஹரீஷ், அவ்வழியாக வந்த ஏழு வாகனங்களை நிறுத்தினார்.
அவற்றின் ஓட்டுநர்களிடம் ஆவணங்களை கேட்ட போது, மொபைல் போனில் காட்டினர். அதை ஏற்க மறுத்த ஹரீஷ் வாகனங்களை பழவந்தாங்கல் போலீசாரிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க கோரினார்.
ஜல்லி, மணல் குறித்து வருவாய் துறை அல்லது கணிமவள துறை அதிகாரிகள் தான் நடவடிக்கை எடுக்க முடியும் என, போலீசார் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த ஆலந்துார் வருவாய் ஆய்வாளர் சரவணன் போலீசாரிடம், உரிய ஆவணங்கள் சமர்ப்பித்தால் வாகனங்களை விடுவிக்குமாறு தெரிவித்தார். இதையடுத்து, ஏழு வாகன ஓட்டுநர்களும் உரிய ஆவணங்களை காண்பித்து வாகனங்களை எடுத்து சென்றனர்.
.
***
