/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கடத்தப்பட்ட ஆம்புலன்ஸ் கோடம்பாக்கத்தில் பரபரப்பு
/
கடத்தப்பட்ட ஆம்புலன்ஸ் கோடம்பாக்கத்தில் பரபரப்பு
ADDED : ஜூன் 01, 2025 12:45 AM
கோடம்பாக்கம், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவநேசன், 28; ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர். கடந்த 29ம் தேதி, வேளாங்கண்ணி சர்ச்சிற்கு வந்திருந்த, சென்னை, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த நபருக்கு, திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, சிவநேசனின் ஆம்புலன்ஸில் நாகப்பட்டினத்தில் இருந்து கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.
சிவநேசன் ஆம்புலன்ஸை மருத்துவமனை முன் நிறுத்தி, நோயாளியுடன் மருத்துவமனையின் உள்ளே சென்று திரும்பினார். அப்போது ஆம்புலன்ஸ் மாயமாகி இருந்தது.
இது குறித்து கோடம்பாக்கம் போலீசார் விசாரித்தனர். இந்த நிலையில், கடத்தப்பட்ட ஆம்புலன்ஸ், சோழவரம் காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது.
விசாரணையில், கடத்தப்பட்ட ஆம்புலன்ஸின் உரிமையாளர் விக்ரம், செங்குன்றத்தைச் சேர்ந்த மெக்கானிக் ஜான், 40, என்பவரிடம், டெம்போ டிராவலர் வாகனத்தை கொடுத்து, ஆம்புலன்ஸ் வாகனமாக மாற்றி கொண்டுள்ளார்.
அதற்கான கூலியில், ஒரு லட்சம் ரூபாய் பாக்கி இருந்தது. விக்ரம் அந்த பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
இந்த நிலையில், ஆம்புலன்ஸ் வாகனம் சென்னைக்கு வரும் தகவல் அறிந்த ஜான், ஆம்புலன்ஸை மருத்துவமனையில் இருந்து எடுத்து, காவல் நிலையத்தில் விட்டு, போலீசாரிடம் தகவல் தெரிவித்தது தெரியவந்தது.
ஜானுக்கு பணம் அளிப்பதாக ஒப்புக்கொண்ட விக்ரம், புகார் தேவையில்லை என தெரிவித்தார். இதையடுத்து, இருவரும் சமரசமாக சென்றனர்.