/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வண்டலுார் பூங்காவில் குட்டி ஈன்றது நீர் யானை
/
வண்டலுார் பூங்காவில் குட்டி ஈன்றது நீர் யானை
ADDED : நவ 19, 2024 12:19 AM
வண்டலுார்
வண்டலுார் உயிரியல் பூங்காவில், ஐந்து பெண், இரண்டு ஆண் என, ஏழு நீர்யானைகள் உள்ளன. இவற்றில், பிரகுர்த்தி என்ற பெண் நீர் யானை, 8 மாத கர்ப்பத்திற்கு பின் ஆக., 21ல், ஒரு குட்டியை ஈன்றது. நீர் யானையின் குட்டி பற்றிய விபரத்தை, பூங்கா நிர்வாகம், ஆக., 25ல் வெளியிட்டது.
இந்நிலையில், பிறந்து எட்டு நாட்களில் நீர்யானை குட்டி இறந்தது. அரிய விலங்கான நீர்யானை குட்டி இறந்த விஷயம், பூங்கா ஊழியர்கள் மற்றும் விலங்கு ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இச்சம்பவத்தை தொடர்ந்து, நீர்யானை கூண்டு, பார்வையாளர்களுக்கு அனுமதியின்றி மூடி வைக்கப்பட்டது. விசாரித்ததில், நீர் யானைகளை ஆண், பெண் என, தனித்தனியாக பிரிக்கும் நடவடிக்கையாகவே மூடி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், அங்கு பராமரிக்கப்படும் மற்றொரு நீர் யானை, நேற்று முன்தினம் குட்டி ஈன்றுள்ளது. அதனால், பூங்கா நிர்வாகம், குட்டியையும், தாயையும் கவனமாக பராமரிக்க வேண்டும் என்று, விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீர் யானை குட்டி ஈன்றதை உறுதி செய்ய, பூங்கா உதவி இயக்குனர் மணிகண்ட பிரபுவை, பல முறை மொபைல் போனில் தொடர்பு கொண்டும், அவர் தொடர்பில் கிடைக்கவில்லை.