தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மருத்துவமனையில் தொடரும் தாக்குதல்கள்

 மருத்துவமனையில் தொடரும் தாக்குதல்கள்

 மருத்துவமனையில் தொடரும் தாக்குதல்கள்


UPDATED : ஜன 14, 2026 07:18 AM

ADDED : ஜன 14, 2026 05:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 14, 2026 07:18 AM ADDED : ஜன 14, 2026 05:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கே.கே.நகர்: இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு 'பர்தா' அணிந்து வந்து, தன்னை அசிங்கமாக பேசிய மூதாட்டியை சுத்தியலால் தாக்கிய இளம்பெண் கைது செய்யப்பட்டார்.

சென்னை, விருகம்பாக்கம், இந்திரா நகரைச் சேர்ந்த ராணி, 65. இவரது கணவர் தியாகராஜ், 70. கடந்த 10ம் தேதி மாலை, தியாகராஜுக்கு டயாலிசிஸ் சிகிச்சைக்காக ராணி அவரை, கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

அப்போது, மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்ற ராணியை, 'பர்தா' அணிந்து வந்த பெண் சுத்தியலால் தலையில் தாக்கி தப்பினார். ராணியின் அலறல் சத்தம் கேட்டு வந்த மருத்துவமனை ஊழியர்கள், அவரை சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரது தலையில் ஏற்பட்ட காயத்திற்கு ஐந்து தையல்கள் போடப்பட்டன.

இது குறித்து எம்.ஜி.ஆர்., நகர் போலீசார் விசாரித்து, தரமணி, பெரியார் நகரைச் சேர்ந்த நித்யா, 28, என்பவரை நேற்று கைது செய்தனர்.

விசாரணையில் தெரிய வந்ததாவது:

நித்யா தன் தந்தைக்கு டயாலிசிஸ் சிகிச்சைக்காக, கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது ராணியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தன் கணவரின் மருத்துவ அறிக்கையை வாங்கி வருமாறு ராணி, நித்யாவிடம் கேட்டதாகவும் அதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால், ராணி அவரை, மற்றவர்கள் முன்னிலையில் அசிங்கமாக திட்டியுள்ளார்.

இதனால் மன உளைச்சல் அடைந்த நித்யா, ராணியை பழிவாங்க திட்டமிட்டார். அதன்படி, தி.நகரில் உள்ள நடைபாதை கடையில் பர்தாவை வாங்கி, சம்பவதன்று வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து, ரயிலில் சைதாப்பேட்டை வந்துள்ளார். அங்கு பர்தாவை அணிந்து ஆட்டோவில் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு வந்து ராணியை தாக்கியுள்ளார்.

பின்னர், மருத்துவமனையில் இருந்து வேறு ஒரு ஆட்டோவில் சைதாப்பேட்டை திரும்பி, பர்தாவை மாற்றிய பின், மற்றொரு ஆட்டோவில் வீட்டிற்கு சென்றதும் தெரியவந்தது.

கே.எம்.சி.,யில் பணியில் இருந்த ஐந்து போலீசார் 'சஸ்பெண்ட்'

சென்னை, கொளத்துாரைச் சேர்ந்தவர் ஆதி கேசவன், 20; கொலை குற்றவாளி. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கள்ள காதலியை சந்திக்க, கடந்த 11ம் தேதி இரவு சென்றார். பின் பிரசவ வார்டு அருகே உள்ள காத்திருப்பு அறையில் போதையில் உறங்கினார்.

நேற்று முன்தினம் அதிகாலை, 'ஹெல்மெட்' அணிந்து வந்த மூவர் பட்டாக்கத்தியால், ஆதிகேசவனை வெட்டி கொலை செய்தனர்.

கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குள் புகுந்து ரவுடியை கொலை செய்த வனக்குமார் 19, ஸ்ரீராம் 21, ஜெயப்பிரதாப் 21, சூர்யா 18, கார்த்திக் ராஜா 18, ஆலிபாய் 19 உட்பட எட்டு பேரை போலீசார் கைது செய்தனர். இதில், தப்பியோட முயன்று தவறி விழுந்த கார்த்திக்கிற்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இந்நிலையில், சம்பவத்தன்று மருத்துவமனையில் பணியில் இருந்த கீழ்ப்பாக்கம் காவல் நிலைய போலீசாரான சரிதா, அம்பிகா, நீலாவதி, நரேந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர் கிரிதரன் ஆகிய ஐந்து பேரும் , நேற்று 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

கொலை சம்பவத்திற்குபின், நோயாளியை சந்திக்க வரும் நபர்களுக்கும், அடையாள அட்டை வழங்கப்படுகிறது. ஒரு நோயாளிக்கு ஒரு நபர் என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது.

ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிறுவனை கொல்ல முயற்சி?



திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந் த வர் ஜோதி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன் விரோதம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பிளஸ் 2 படித்து வரும் ஜோதியின் 16 வயது மகன், கடந்த 7ம் தேதி வீட்டருகே உள்ள, கரும்பு தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார்.

அப்போது, மர்ம நபர்கள் சிறுவனை பூச்சி கொல்லி மருந்து குடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. உயிருக்கு போராடிய சிறுவன், மேல்சிகிச்சைக்காக தற்போது சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரின் தாய் 'வீடியோ' ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'உயிருக்கு போராடி வரும் என் மகனை, மர்ம நபர்கள் கொலை செய்ய முயற்சி செய்கின்றனர்.

இது குறித்து கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம்; போலீசார் கைது செய்யவில்லை. தற்போது, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் கொலை செய்ய முயற்சி நடப்பது பற்றி புகார் அளித்தும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.

புகாரை வாபஸ் பெற வேண்டும்' என, போலீசார் மிரட்டுவதாக கண்ணீர் மல்க கூறியுள்ளார். வீடியோ புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us