/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மருத்துவமனைகளே நோய் பரப்பும் அவலம் 'கவலைக்கிடம்!' கழிப்பறை முதல் வார்டு வரை கடும் அசுத்தம்
/
மருத்துவமனைகளே நோய் பரப்பும் அவலம் 'கவலைக்கிடம்!' கழிப்பறை முதல் வார்டு வரை கடும் அசுத்தம்
மருத்துவமனைகளே நோய் பரப்பும் அவலம் 'கவலைக்கிடம்!' கழிப்பறை முதல் வார்டு வரை கடும் அசுத்தம்
மருத்துவமனைகளே நோய் பரப்பும் அவலம் 'கவலைக்கிடம்!' கழிப்பறை முதல் வார்டு வரை கடும் அசுத்தம்
ADDED : மே 25, 2024 11:07 PM

சென்னையில் உள்ள பிரதான அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில், கழிப்பறை முதல் வார்டுகள் வரை அசுத்தமாக இருக்கின்றன. இவற்றால் நோயாளிகளுக்கு, நுரையீரல், சிறுநீரக பாதை தொற்று, நிமோனியா உள்ளிட்ட பாதிப்புகள் எற்பட்டு அவை, 'ஆன்டிபயாட்டிக்'கில் கூட கட்டுக்குள் வராத தீவிர தொற்றாக இருக்கிறது என, டாக்டர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில், ராஜிவ்காந்தி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ஓமந்துாரார் பல்நோக்கு, ஓமந்துாரார் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, ராயப்பேட்டை, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை, மகப்பேறு நல மருத்துவமனை, கண் மருத்துவமனை, ஆர்.எஸ்.ஆர்.எம்., மருத்துவமனை உள்ளிட்ட பிரதான மருத்துவமனைகள் உள்ளன.
இதில், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு தினமும் 15,000 பேர், ஸ்டான்லியில் 5,000க்கும் மேற்பட்டோர் என, அரசு மருத்துவமனைகளை மட்டும், 30,000க்கும் மேற்பட்டோர் தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.
ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்தி வரும் அரசு மருத்துவமனைகளின், பாதுகாப்பு மற்றும் துாய்மை பணிகளை மேற்கொள்ள, தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக, மாதத்துக்கு பல கோடி ரூபாயை அரசு வழங்கி வருகிறது.
ஆனால், தனியார் ஒப்பந்த நிறுவனத்தார், முறைப்படி மருத்துவமனையை சுத்தம் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக, தீவிர மற்றும் அவசர சிகிச்சை பிரிவை, அவ்வப்போது சுத்தம் செய்வது அவசியம். ஆனால், தினமும் ஒருமுறை தான் சுத்தம் செய்கின்றனர். ஓமந்துாரார் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், சாதாரண வார்டுகளில் மூன்று நாளைக்கு ஒருமுறை தான் சுத்தம் செய்கின்றனர்.
அதேபோல், ராஜிவ்காந்தி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பிரதான அரசு மருத்துவமனைகளில் கூட சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. தனியார் நிறுவன பணியாளர்கள் சுகாதாரமாக வைத்திருக்காததால், தொற்றால் நோயாளிகள் பாதிக்கப்படுவதாக, டாக்டர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, அரசு டாக்டர்கள் கூறியதாவது:
அரசு மருத்துவமனைகளில், மருத்துவமனை முதல்வர்கள் ஒவ்வொரு நாளும் காலையிலும், சில நேரங்களில் மாலையிலும் ரோந்து வருகின்றனர்.
முதல்வர் ரோந்து வரும் நேரத்தையும், பகுதியையும் மற்றவர்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு தான், துாய்மை பணியாளர்கள் வார்டுகளை சுத்தம் செய்கின்றனர்.
அதுவும், முதல்வர் வரும் பகுதிகள் மட்டுமே சுத்தம் செய்யப்படுகிறது. அனைத்து வார்டுகளிலும், கழிப்பறைகளில் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாக மட்டுமின்றி அச்சுறுத்தலாகவே மாறியுள்ளது.
மருத்துவமனைக்கு வரும் நோயாளி, வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர், சிகிச்சையில் இருக்கும்போதே நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்படுகிறார். இதற்கு, வார்டு மற்றும் கழிப்பறை சுகாதாரமாக இல்லாதது முக்கிய காரணம்.
அதேபோல், அறுவை சிகிச்சை செய்த நோயாளிக்கு, தையல் போடப்பட்ட இடத்தில் கிருமி தொற்று ஏற்பட்டு, சில நேரங்களில் தையல் பிரிந்து விடுகிறது.
ஐ.சி.யு., போன்ற தீவிர சிகிச்சை பிரிவில், பயிற்சி அளிக்கப்பட்ட துாய்மை பணியாளர்களை தான் பணியமர்த்த வேண்டும். ஆனால், நோயாளி மலம் கழித்தல் போன்றவற்றிற்கு, அவர்களின் உறவினர்களை உள்ளே வரவழைத்து, சுத்தம் செய்ய அறிவுறுத்துகின்றனர்.
இதனால், நோயாளி மட்டுமின்றி உடன் இருப்பவர்களும் சில நேரங்களில், நுரையீரல் தொற்று, சிறுநீரக பாதை தொற்று, நிமோனியா, டைபாய்டு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படுகின்றனர். மருத்துவமனைகளில் பரவும் இவ்வகை பாதிப்புகள் தீவிர தன்மையுடன் இருப்பதால், 'ஆன்டிபயாடிக்' மருந்துகளால்கூட கட்டுப்படுத்த முடியாத சூழல் உள்ளது.
மேலும், கழிப்பறைகள் எந்நேரமும் ஈரத்தன்மையுடன் இருப்பதால், நோயாளிகள் சிலர் வழுக்கி விழுந்து, கை, கால் எலும்பு முறிவுக்கு உள்ளாகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
துாய்மை பணி யாளர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. எங்களுக்கும் விடுமுறை கொடுக்காமல், தொடர்ந்து கொத்தடி மை போல் பணியாற்ற வலியுறுத்துகின்றனர். கோரிக்கையை கூட அரசும், எங்கள் நிறுவனமும் கேட்க தயாராக இல்லை. குறைந்த சம்பளம் என்பதால், நோயாளிகள் பணம் கொடுக்கும்போது வாங்கிக்கொள்வோம். மற்றபடி, எங்களது பணி நேரத்தில் முறையாக பணியை செய்து வருகிறோம்.
- துாய்மை பணியாளர்கள்
- நமது நிருபர் -