/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சொத்து பிரச்னையில் 420 நாட்களாக வீட்டின் மின் இணைப்பு துண்டிப்பு இரு வாரத்தில் தீர்வு காண உத்தரவு
/
சொத்து பிரச்னையில் 420 நாட்களாக வீட்டின் மின் இணைப்பு துண்டிப்பு இரு வாரத்தில் தீர்வு காண உத்தரவு
சொத்து பிரச்னையில் 420 நாட்களாக வீட்டின் மின் இணைப்பு துண்டிப்பு இரு வாரத்தில் தீர்வு காண உத்தரவு
சொத்து பிரச்னையில் 420 நாட்களாக வீட்டின் மின் இணைப்பு துண்டிப்பு இரு வாரத்தில் தீர்வு காண உத்தரவு
ADDED : ஆக 06, 2025 12:15 AM
சென்னை, சொத்து பிரச்னையில், 420 நாட்களாக வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளதாக பெண் தொடர்ந்த வழக்கில், இரு வாரங்களில் மின்வாரியம் இணைப்பு வழங்க,சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வில்லிவாக்கத்தை சேர்ந்த வி.சியாத்தம்மாள் என்பவர் தாக்கல் செய்த மனு:
வில்லிவாக்கம் பஜனைகோவில் தெருவில் வசிக்கிறேன். எனக்கு சொந்தமான இரண்டு மாடி வீட்டை, என் அக்கா சுந்தரி ஆக்கிரமித்து கொண்டார்.
நான் வீட்டில் இல்லாத நாளில், என் வீட்டை இடித்து, புதிதாக வீடு கட்ட தொடங்கினார். இதுகுறித்து கேட்டபோது, சுந்தரி, அவரது கணவர், மகன் மற்றும் மகள் ஆகியோர், என்னை தாக்கினர்.
ராஜமங்கலம் போலீசில் புகார் கொடுத்தேன். எஸ்.ஐ., அபிநயா, என்னை அழைத்து மிரட்டினார். எனக்கு தெரிந்தவர்களுடன் காவல் நிலையம் சென்றபோது, புகார் வேண்டாம்; சமரசம் பேசி தீர்த்து கொள்ளலாம் என, எஸ்.ஐ., தெரிவித்தார்.
கடந்தாண்டு மே 3ல், எஸ்.ஐ., உதவியுடன் சுந்தரி என் வீட்டு மின் இணைப்பை துண்டித்து விட்டார். இன்ஸ்பெக்டர் மூர்த்தியிடம் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை.
கடந்த 420 நாட்களாக மின்சாரம் இன்றி கஷ்டப்படுகிறேன். மின் இணைப்பு தர அதிகாரியிடம் மனு கொடுத்தேன். மின் இணைப்பு வழங்க வந்த மின் ஊழியர்களை மிரட்டி விரட்டி விட்டனர்.
என் வீட்டுக்கு மின் இணைப்பு வழங்கவும், மின் இணைப்பு தர வரும் மின்வாரிய ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் கே.சக்திவேல், கே.வேதவேல் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி, 'மனுதாரரின் வீட்டுக்கு இரண்டு வாரங்களில், ராஜாஜி நகர் பிரிவு மின் வாரிய உதவி பொறியாளர் மின் இணைப்பு வழங்க வேண்டும்.
'மனுதாரருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், மின் இணைப்பு வழங்கும்போது, கொளத்துார் ராஜமங்கலம் இன்ஸ்பெக்டர் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தார்.
***