/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இலவச உணவு வினியோகம் தாமதத்தால் அதிருப்தி எவ்வளவு நேரம் காத்துக்கிடப்பது? ஏமாற்றத்தோடு திரும்பும் துாய்மை பணியாளர்கள் �
/
இலவச உணவு வினியோகம் தாமதத்தால் அதிருப்தி எவ்வளவு நேரம் காத்துக்கிடப்பது? ஏமாற்றத்தோடு திரும்பும் துாய்மை பணியாளர்கள் �
இலவச உணவு வினியோகம் தாமதத்தால் அதிருப்தி எவ்வளவு நேரம் காத்துக்கிடப்பது? ஏமாற்றத்தோடு திரும்பும் துாய்மை பணியாளர்கள் �
இலவச உணவு வினியோகம் தாமதத்தால் அதிருப்தி எவ்வளவு நேரம் காத்துக்கிடப்பது? ஏமாற்றத்தோடு திரும்பும் துாய்மை பணியாளர்கள் �
ADDED : நவ 18, 2025 12:25 AM

சென்னையில் துாய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ள நிலையில், 60 சதவீதம் பேருக்கு கூட உணவு வினியோகம் செய்யப்படவில்லை. உணவுக்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதால், துாய்மை பணியாளர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகின்றனர். சரியான திட்டமிடல் இல்லாததே குழப்பத்திற்கு காரணம்; உணவுக்கு பதிலாக பணமாக தந்திருக்கலாம் எனவும், துாய்மை பணியாளர்கள் கூறுகின்றனர்.
சென்னை மாநகராட்சியில், ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் துாய்மை பணியை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து, ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களை சமாதானப்படுத்தும் வகையில், ஒருநாள் சம்பளத்தை, 585 ரூபாயில் இருந்து, 761 ரூபாயாக அரசு உயர்த்தியது. துாய்மை பணியாளரர்களுக்கு மூன்று, 'ஷிப்ட்டு'களிலும் உணவு வழங்கும் திட்டத்தை, இம்மாதம், 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதில், மாநகராட்சி சார்ந்த, 31,373 துாய்மை பணியாளர்கள் பயன்பெறுவர் என, அரசு அறிவித்தது.
உணவு வழங்கும் ஒப்பந்தம், 'புட் ஸ்விங் என்டர்பிரைசஸ்' என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம், செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் உள்ள, சமையல் கூடத்தில் இருந்து, உணவு தயாரித்து, 200 வார்டுகளுக்கும் வினியோகித்து வருகிறது.
திட்டம் துவங்கி மூன்று நாட்களே ஆகிறது. காலை உணவு பல இடங்களில் வினியோகம் செய்யப்படவில்லை. மதிய உணவும், இரண்டு மணி நேரம் தாமதமாக பிற்பகலில் வந்து சேர்ந்தது. இதுவரை, 60 சதவீதம் பேருக்கு கூட உணவு வழங்கப்படவில்லை.
உணவுக்காக காத்திருந்த துாய்மை பணியாளர்கள், வார்டு கவுன்சிலர்களிடம் முறையிட்டனர். சில கவுன்சிலர்கள், தங்கள் செலவில் ஹோட்டல்களில் இருந்து காலை உணவு வாங்கி கொடுத்து, பிரச்னையை சமாளித்தனர். மதியமும் பல இடங்களில் சாப்பாடு, சரியான நேரத்துக்கும் வராததால், என்ன செய்வது என்று தெரியாமல் மண்டல அதிகாரிகளும், துாய்மை பணியாளர்களை சமாதானப்படுத்த முடியாமல் திணறினர்.
பல இடங்களில் சில மணி நேரம் காத்திருந்த துாய்மை பணியாளர்கள், உணவு கிடைக்காமல் அதிருப்தியில் வீட்டிற்கே சென்றனர்.
இதுகுறித்து, துாய்மை பணியாளர்கள் கூறியதாவது:
பணி முடித்து வீடு திரும்பும் முன், உணவு வழங்குவதாக கூறினர். பணி முடிந்து இரண்டு மணி நேரம் காத்திருந்தும் உணவு கிடைக்கவில்லை. அதிருப்தியோடு வீடு போகிறோம். இன்னும் காத்திருந்து உணவு வாங்கி சாப்பிட்டுவிட்டு, பேருந்து பிடித்து வீடு செல்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது.
எங்கள் பணிக்கு செல்லும் பகுதிகளில், சமூக ஆர்வலர்கள், ஹோட்டல் நிறுவனங்கள் பல நேரங்களில் மனிதாபிமான அடிப்படையில் உணவு தந்து உதவுகின்றன. இதனால், அரசின் உணவு திட்டத்தால் பெரிதாக பலன் இல்லை. இதுபோன்ற சூழலில், சம்பளத்தில் உணவு படியாக, குறிப்பிட்ட தொகையை சேர்த்திருக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சமாளிக்க முடியலை
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
மாநகராட்சியில் உள்ள மூன்று வட்டாரங்களில், மூன்று சமையல் கூடம் அமைத்து உணவு தயாரிக்கப்படும் என, ஒப்பந்த நிறுவனம் கூறியது. முதல்வர் திட்டத்தை துவக்கி வைப்பதற்கு முதல்நாள், திடீரென ஒரே இடத்தில் சமைத்து, வினியோகிப்பதாக கூறப்பட்டது.
போக்குவரத்து நெரிசல், அதிக துாரத்தை கணக்கில் கொள்ளாமல், ஒரே இடத்தில் சமைப்பதால், பல்வேறு சிக்கல்களை சந்திக்கிறோம். உணவு தயாரிக்கும் நிறுவனத்தில் போதியளவு பணியாளர்கள் இல்லாததால், உணவு பார்சல் செய்து அனுப்புவதில், தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அவற்றை சரி செய்து, இனியாவது சரியான நேரத்தில் உணவு வினியோகிக்கும் வகையில், உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், திட்டத்தை செயல்படுத்தினாலும் அரசுக்கு கெட்ட பெயர்தான் ஏற்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
குழந்தைகளாவது சாப்பிடுவாங்க! துாய்மை பணியாளர்கள் 60 சதவீதம் பேருக்குதான், நேற்று முன்தினம் உணவு வினியோகம் செய்யப்பட்டது. நேற்று காலை ஓரளவு சரி செய்யப்பட்டு, 90 சதவீதமும், மதியம் 100 சதவீதமும் உணவு வினியோகம் நடந்துள்ளது. உணவின் தரம், சுவை மாறக்கூடாது என்பதால், ஒரே இடத்தில் தயாரிக்கப்படுகிறது. ஆரம்ப காலம் என்பதால் சில இடர்பாடுகள் உள்ளன. உணவை சூடாக பார்சல் செய்யும்போது, சில மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. இவற்றை சரிசெய்ய, முகப்பேர், சோழிங்கநல்லுார் ஆகிய இடங்களில், உணவு பார்சல் மையங்கள் துவங்கப்பட்டுள்ளன. இதனால், பார்சல் செய்வதில் ஏற்படும் தாமதம் குறையும். உணவுக்கு பதிலாக பணமாக கொடுத்தால், சில துாய்மை பணியாளர்கள் வேறு வகையில் செலவிட வாய்ப்புள்ளது. ஊட்டச்சத்து நிறைந்த உணவாக அளிப்பதால், அவர்கள் உடல்நிலை மேம்படும். அவர்கள் சாப்பிடாவிட்டாலும், அவர்களின் குழந்தைகள் சாப்பிட வாய்ப்புள்ளது. - ஜெ.குமரகுருபரன், கமிஷனர், சென்னை மாநகராட்சி
- நமது நிருபர் -

