UPDATED : டிச 21, 2025 05:18 AM
ADDED : டிச 21, 2025 05:13 AM

ரயில்வே குடியிருப்பில் எலும்புக்கூடு
திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ரயில் நிலையம் அருகே, ரயில்வே ஊழியர்கள் தங்குவதற்கு, 15க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில் நான்கு குடியிருப்புகள் சேதமடைந்ததால், ஊழியர்கள் யாரும் அவற்றில் தங்கவில்லை.இந்நிலையில், சேதமடைந்த குடியிருப்பு பகுதிக்கு நேற்று காலை, இளைஞர்கள் சிலர் சென்றனர். அங்கு, மனித எலும்புக்கூடு கிடந்தது. தகவலறிந்து வந்த திருத்தணி போலீசார் எலும்புக்கூடை மீட்டனர். எட்டு மாதங்களுக்கு முன் இறந்திருக்காலம். எலும்புக்கூடு அருகே ஒரு லுங்கியும், ஆண் அணியும் செருப்பும் கைப்பற்றி விசாரித்து வருவதாக, போலீசார் கூறினர்.
தொழிலதிபரை கடத்திய 6 பேர் கைது
கோயம்பேடு: தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ரவீந்திரா, 57. தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், குடும்பத்துடன் தெலுங்கானாவில் இருந்து சென்னை வளசரவாக்கத்தில் குடியேறினார்.
கடந்த 19ம் தேதி, வீட்டிற்கு வெளியே நின்ற அவரை, காரில் வந்த மர்ம கும்பல் கடத்தியது. தகவலறிந்த கோயம்பேடு போலீசார், கடத்தல் கும்பலை நெல்லுாரில் மடக்கினர்.கடத்தில் ஈடுபட்ட, செகந்திராபாத்தைச் சேர்ந்த ஜஸ்வத், 38, தடிசது ப்ரீதம் குமார், 35; தராவத் ஸ்ரீகாந்த், 30; வங்காரி பாபு, 45; பிங்கி வைகுந்தம், 44; பீம் ரெட்டி நாகராஜு, 35, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.
ரவீந்திர கவுடாவுக்கு கடன் கொடுத்து ஏமாந்த இவர்கள், அவரை பின் தொடர்ந்து வந்து கடத்தலில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

