/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
7வது நாளாக தொடரும் உண்ணாவிரத போராட்டம்
/
7வது நாளாக தொடரும் உண்ணாவிரத போராட்டம்
ADDED : நவ 24, 2025 03:11 AM

அம்பத்துார்: உடல்நிலையை பரிசோதிக்க மருத்துவமனைக்கு அழைத்த போலீசாரின் அழைப்பை ஏற்காமல், பெண் துாய்மை பணியாளர்கள், போராட்டத்தை தொடர்ந்தனர்.
அம்பத்துார், கல்யாணபுரம், மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள உழைப்போர் உரிமை இயக்க அலுவலகத்தில், ஏழாவது நாளாக நேற்றும், நான்கு பெண் துாய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம், திருவள்ளூர் மாவட்ட மருத்துவ குழுவினர், நேற்று பரிசோதனை மேற்கொண்டனர். அதில், அவர்களுக்கு, ரத்த அழுத்தம், நாடி துடிப்பு குறைவாக இருப்பதாக, அம்பத்துார் போலீசாருக்கு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
இதையடுத்து, செங்குன்றம் போலீஸ் துணை கமிஷனர் பாலாஜி, உதவி கமிஷனர் மற்றும் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார், துாய்மை பணியாளர்களை சிகிச்சைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு செல்ல அழைத்தனர்.
ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நான்கு பெண் துாய்மை பணியாளர்களும், உழைப்போர் உரிமை இயக்கத்தினரும், போலீசாரின் அழைப்பை ஏற்காமல், போராட்டத்தை தொடர்ந்தனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், 'எங்களுக்கு மீண்டும் பழைய பணி வேண்டும். அதற்காக தான் நாங்கள் போராடுகிறோம். சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நேரில் வந்து பேச்சு நடத்த வேண்டும். அதுவரை எத்தனை நாட்களானாலும் போராட்டம் தொடரும்' என்றனர்.

