தி.மு.க., செய்ய தவறிய பணிகளை செய்து முடிப்பேன்: அசோக் உறுதி
தி.மு.க., செய்ய தவறிய பணிகளை செய்து முடிப்பேன்: அசோக் உறுதி
ADDED : ஏப் 14, 2026 06:23 PM

வேளச்சேரி:வேளச்சேரி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் அசோக், அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர் பகுதியில் பிரசாரம் செய்தார். அம்பேத்கரின் 136வது பிறந்தநாளை முன்னிட்டு, தாமோதரபுரம், புதுதெருவில் உள்ள அம்பேத்கார் சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது, அசோக் கூறியதாவது:
தி.மு.க.,வின் பொய் வாக்குறுதிகளை பேசி வருகிறது. மகளிர் உரிமை தொகை 28 மாதங்கள் கொடுக்கவில்லை. அதே போல், 505 வாக்குறுதியில் 10 சதவீத வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றிய தி.மு.க., அரசு, மீண்டும் 527 வாக்குறுதிகளை அறிவித்து மக்களை மீண்டும் ஏமாற்ற முயற்சிக்கின்றன.
தமிழக மக்கள் அறிவார்ந்தவர்கள். இந்த முறை தக்க பாடம் புகட்டுவார்கள். தொகுதியை சுற்றி வரும்போது, சாலைகள் மிகவும் மோசமாக இருப்பதும், விபத்துகளுக்கும் இந்த சாலைகள் தான் காரணம் எனவும் தெரிகிறது.
நான் வெற்றி பெற்றதும், தரமான சாலை, குடிநீர் வழங்குவதை உறுதி செய்வேன். மின்தடைக்கு நிரந்தர தீர்வு காண்பேன். கடந்த பத்து ஆண்டுகள் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர்கள், தொகுதிக்கு ஆக்கப்பூர்வமான திட்டங்கள் எதுவும் கொண்டு வரவில்லை. மக்கள் கேட்டும் அவர்கள் செய்ய தவறிய பணிகளை, நான் செய்து முடிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரசாரத்தின்போது, பகுதி செயலர்கள் கண்ணன், கணேசன், வட்ட செயலர்கள் குமரன், ராஜா, பா.ஜ.,வில் சாய்ராம் லட்சுமி, பா.ம.க.,வில் ஜனார்த்தனன், ஐ.ஜெ.கே.,வில் தயாநிதி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
