அடிப்படை வசதிகளை மேம்படுத்துவேன்: அ.தி.மு.க., வேட்பாளர் கந்தன் பிரசாரம்
அடிப்படை வசதிகளை மேம்படுத்துவேன்: அ.தி.மு.க., வேட்பாளர் கந்தன் பிரசாரம்
ADDED : ஏப் 19, 2026 07:45 PM

சோழிங்கநல்லுார்:சோழிங்கநல்லுார் அ.தி.மு.க., வேட்பாளர் கந்தன், செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு, கண்ணகி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிரசாரம் செய்தார். அவருக்கு பொது மக்கள் அமோக வரவேற்பு அளித்தனர்.
அப்போது கந்தன் பேசியதாவது:
கடந்த 2011ல், சென்னை மாநகராட்சியை, 200 வார்டுகளாக உயர்த்தி, செம்மஞ்சேரி சென்னை மாநகராட்சியோடு இணைக்கப்பட்டது. பின், அப்பகுதியில் கழிவுநீர், மழைநீர் கால்வாய், மருத்துவமனை போன்ற அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டன.
தொகுதியில் அ.தி.மு.க., அமைத்துக் கொடுத்த மருத்துவமனை உள்ளது. ஆனால், மருத்துவர்கள் இல்லை. மாநகராட்சி அலுவலகத்திலும் அதிகாரிகள் இல்லை.
அ.தி.மு.க., ஆட்சியில், தாலிக்கு தங்கம் கொடுத்ததால், அனைவரின் கழுத்திலும் தாலி இருந்தது. ஆனால், தி.மு.க., ஆட்சியில் தாலிச்செயின் அறுப்பு சம்பவங்கள் தான் அதிகரித்துள்ளன. அதனால், பெண்கள் கோலம் போடவே அச்சப்படுகின்றனர்.
அ.தி.மு.க.,விற்கு ஓட்டளித்து, என்னை வெற்றிபெறச் செய்தால், உங்களில் ஒருவனாக இருந்து, துாய்மையான குடிநீர், சாலை, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்துவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில், சோழிங்கநல்லுார் கிழக்கு பகுதி செயலர் பழனிவேல், மாவட்ட துணை செயலர் செம்மை நாராயணன், பகுதி அவைத் தலைவர் பிரகாஷ், வட்ட செயலர்கள் ஹேமந்த்குமார், வெங்கடேஷ், வழக்கறிஞர் பிரிவு வழக்கறிஞர் லிங்கேஷ், பா.ஜ., மாவட்ட தலைவர் குமார், பா.ம.க., மாவட்ட செயலர் நிர்மல்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
