/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பட்டாசு கடை 'டெண்டர்' விட ஐகோர்ட் இடைக்கால தடை
/
பட்டாசு கடை 'டெண்டர்' விட ஐகோர்ட் இடைக்கால தடை
ADDED : அக் 16, 2024 12:09 AM
சென்னை, சென்னை தீவுத்திடலில், பட்டாசு கடைகள் அமைப்பதற்கான, 'டெண்டர்' நடைமுறைகளுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச்சங்க நிர்வாக தலைவர் நடராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
பட்டாசு கடைக்கான நிபந்தனைகளில், 'சுற்றுலா வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனரே, டெண்டர் தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுப்பார். டெண்டரை மாற்றியமைக்கவும், விண்ணப்பத்தை எந்த காரணமுமின்றி ஏற்கவும், நிராகரிக்க முடியும்' என்று உள்ளது.
இயற்கை நீதி, சட்டத்துக்கு எதிராக வெளியிடப்பட்ட இந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும். பட்டாசு விற்பனை செய்யும் தகுதியில்லாத முகவர்கள் நலச் சங்க விண்ணப்பத்தை நிராகரிப்பதோடு, டெண்டர் நடைமுறைகளுக்கும் தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'அரசே பட்டாசு கடைகளை அமைக்காமல், வெளிநபர்களுக்கு டெண்டர் அளித்து, பட்டாசு விற்பனை செய்வது ஏன்' என, நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு, ஒவ்வொரு ஆண்டும் இதே நடைமுறை தான் பின்பற்றப்படுகிறது என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதி, தீவுத்திடலில் பட்டாசு கடை அமைக்க மேற்கொள்ளப்பட்ட டெண்டர் நடைமுறைகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.