/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரேஸ் கிளப் மனுவில் அவசரத்தன்மை வழக்கை விசாரணைக்கு ஏற்றது ஐகோர்ட்
/
ரேஸ் கிளப் மனுவில் அவசரத்தன்மை வழக்கை விசாரணைக்கு ஏற்றது ஐகோர்ட்
ரேஸ் கிளப் மனுவில் அவசரத்தன்மை வழக்கை விசாரணைக்கு ஏற்றது ஐகோர்ட்
ரேஸ் கிளப் மனுவில் அவசரத்தன்மை வழக்கை விசாரணைக்கு ஏற்றது ஐகோர்ட்
ADDED : செப் 27, 2024 12:51 AM
சென்னை, சென்னை, கிண்டியில் உள்ள 160.68 ஏக்கர் நிலத்தை, 99 ஆண்டுகளுக்கு, 'ரேஸ் கிளப்' நிர்வாகத்திற்கு, அரசு குத்தகைக்கு வழங்கியது. 730.86 கோடி ரூபாய் குத்தகை பாக்கி செலுத்தாததால், குத்தகையை ரத்து செய்து, தமிழக அரசு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் ரேஸ் கிளப் நிர்வாகம் மனு தாக்கல் செய்தது.
இம்மனு, நீதிபதி டீக்காராமன் முன் விசாரணைக்கு வந்தபோது, 'அரசு தரப்பிற்கு நோட்டீஸ் வழங்குவதில் விலக்கு அளிக்கும் வகையில், அவசரம் உள்ளதா, இல்லையா என்பதை பரிசீலிக்க வேண்டும்.
அரசு வசம் நிலம் இன்னும் எடுக்கப்படவில்லை என, ரேஸ் கிளப் தரப்பிலும், அரசு வசம் நிலம் எடுக்கப்பட்டு விட்டது என, அரசு தரப்பிலும் கூறுவதால், இதுகுறித்து அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, இரு தரப்பிலும் மூத்த வழக்கறிஞர்களின் வாதங்கள் நடந்தன. அதைத் தொடர்ந்து, நீதிபதி டீக்காராமன் நேற்று பிறப்பித்த உத்தரவு:
தங்கள் வசம் நிலம் உள்ளது என, இருதரப்பும் கோருகின்றன. அதனால், யார் வசம் உள்ளது என்பதை, சிவில் வழக்குக்கு எண் வழங்கிய பின்னரே கண்டறிய முடியும்.
வழக்கிற்கு இன்னும் எண் வழங்கப்படாததால், மனுவில் கூறியுள்ள விபரங்களுக்குள் நீதிமன்றம் போக முடியாது.
அதனால், நிலம் யார் வசம் என்பது குறித்து கருத்து தெரிவிக்காமல், நீதிமன்றமே சுய கட்டுப்பாட்டை விதித்துக் கொள்கிறது.
இரு நீதிபதிகள் அமர்வில், கடந்த 9ம் தேதி அட்வகேட் ஜெனரல் கூறியது பற்றி, தற்போது இந்த நீதிமன்றம் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
நடந்த நிகழ்வுகள், குத்தகையின் தன்மையை பார்க்கும்போது, ரேஸ் கிளப் தரப்பில் தாக்கல் செய்த வழக்கிற்கு எண் வழங்குவதில் அவசரத் தன்மை உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
அரசுக்கும், வருவாய்த் துறைக்கும் இடையே முரண்பாடு இருந்தாலும், அதற்குள் இந்த நீதிமன்றம் செல்லவில்லை.
அரசு தரப்பிற்கு நோட்டீஸ் வழங்க விலக்கு அளிப்பதில் அவசரத் தன்மை உள்ளதா, இல்லையா என்பதைத்தான், இப்போது நீதிமன்றம் பரிசீலித்தது.
நோட்டீஸ் வழங்க விலக்கு அளித்து, வழக்கில் எண் வழங்கி, விசாரிப்பதற்கு அவசரம் உள்ளது.
எனவே, ரேஸ் கிளப் தரப்பில் தாக்கல் செய்த வழக்கிற்கு எண் வழங்க, பதிவுத்துறைக்கு உத்தரவிடப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில், நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்திற்கு முரணாக, குத்தகை ரத்து செய்யப்பட்டதாகக் கூறி, அரசுக்கு எதிராக அவமதிப்பு வழக்கை, ரேஸ் கிளப் நிர்வாகம் தாக்கல் செய்தது.
இம்மனு, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ராஜசேகர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி, குத்தகை ரத்து விவகாரம் தொடர்பாக, அரசுக்கும், கிளப்புக்கும் இடையில் பேச்சு நடப்பதால், விசாரணையை தள்ளி வைக்கக் கோரினார்.
இதையடுத்து, அவமதிப்பு வழக்கின் விசாரணையை, மூன்று வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

