/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கொசஸ்தலை ஆற்றின் கரைகளை சீரமைக்காவிட்டால் பேராபத்து
/
கொசஸ்தலை ஆற்றின் கரைகளை சீரமைக்காவிட்டால் பேராபத்து
கொசஸ்தலை ஆற்றின் கரைகளை சீரமைக்காவிட்டால் பேராபத்து
கொசஸ்தலை ஆற்றின் கரைகளை சீரமைக்காவிட்டால் பேராபத்து
ADDED : பிப் 23, 2024 12:08 AM

மணலிபுதுநகர், வெள்ளத்தில் சேதமான கொசஸ்தலை ஆற்றின் கரைகளை சீரமைக்காவிட்டால், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பேராபத்து நிகழும் என, மணலிபுதுநகர் வாசிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் திருவள்ளூர், பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கும்.
அதன்படி, கடைமடைப் பகுதிகளான புதுநாப்பாளையம், விச்சூர், இடையஞ்சாவடி, மணலி புதுநகர், சடையங்குப்பம், எண்ணுார் முகத்துவாரம் வழியாக கடலில் கலக்கும்.
அதிகபட்சமாக, 2015ம் ஆண்டு, 90,000 கன அடிக்கும் அதிகமாக உபரிநீர் திறக்கப்பட்டதால் திருவள்ளூர் தெற்கு, வடசென்னையின் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டன.
இதில் விச்சூர், புதுநாப்பாளையம், மணலிபுதுநகர், சடையங்குப்பம் போன்ற பகுதிகளில் கரைகள் பலமின்மை, ஊருக்குள் இருந்து ஆறுடன் இணையும் பிரதான கால்வாய்களுக்கு மதகுகள் இல்லாதது போன்ற காரணங்கள் சுட்டிக் காட்டப்பட்டன.
பேராபத்து
இதைத் தொடர்ந்து, கொசஸ்தலை வடிநில திட்டத்தின் கீழ், 3,220 கோடி ரூபாய் செலவில் திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்துார் உள்ளிட்ட மண்டலங்களில் மழைநீர் வடிகால்கள், இணைப்பு கால்வாய்களுக்கு மதகுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தவிர, கொசஸ்தலை ஆற்றின் கரைகள், வெள்ளிவாயல் - மணலிபுதுநகர் வரை, 6 கி.மீ., துாரத்திற்கு, பாலம் சீரமைக்கும் பணிகள், 15 கோடி ரூபாயில் நடைபெற்றுள்ளன.
இதற்கிடையில்,'மிக்ஜாம்' புயலின் போது கொட்டித் தீர்த்த கனமழைக்கு, பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் முழுதுமாக நிரம்பி, அதிகபட்சமாக வினாடிக்கு, 45,000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது.
இதில், கடைமடை பகுதிகளான மணலி, திருவொற்றியூர் மண்டலத்தின் பெரும்பாலான பகுதிகள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகின.
வெள்ள பாதிப்பு ஒருபுறம் இருப்பினும், கொசஸ்தலை ஆற்றின் கரைகள், புதுநாப்பாளையம், இடையஞ்சாவடி போன்ற பகுதிகளில் சரிந்து, பலமில்லாமல் உள்ளன. இணைப்பு ஆற்றின் பக்கவாட்டு, கான்கிரீட் தடுப்புகள் உடைந்து உள்ளன.
உடனடியாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து கரைகளை சீரமைக்காவிடில், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், கடைமடை பகுதிகள் கடுமையாக பாதிக்கும் என, அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.