/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோயிலுக்கு சென்றால் இறை சிந்தனை மட்டுமே இருக்க வேண்டும்: சிருங்கேரி சுவாமிகள் அருளுரை
/
கோயிலுக்கு சென்றால் இறை சிந்தனை மட்டுமே இருக்க வேண்டும்: சிருங்கேரி சுவாமிகள் அருளுரை
கோயிலுக்கு சென்றால் இறை சிந்தனை மட்டுமே இருக்க வேண்டும்: சிருங்கேரி சுவாமிகள் அருளுரை
கோயிலுக்கு சென்றால் இறை சிந்தனை மட்டுமே இருக்க வேண்டும்: சிருங்கேரி சுவாமிகள் அருளுரை
ADDED : நவ 11, 2024 07:00 AM

சென்னை : ''கோயிலுக்கு சென்றால் மனம் முழுதும் இறை சிந்தனை மட்டுமே இருக்க வேண்டும்'' என சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஸ்ரீவிதுசேகர பாரதீ சுவாமிகள் அருளுரை வழங்கினார்.
சென்னையில் விஜயயாத்திரை மேற்கொண்டுள்ள அவர் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். 14வது நாளான நேற்று காலை வடபழநி முருகன் கோயிலில் தரிசனம் செய்தார்.
கோயிலுக்கு வந்த அவரை தக்காரும், 'தினமலர்' கோவை பதிப்பு வெளியீட்டாளருமான எல்.ஆதிமூலம் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்று, ஒவ்வொரு சன்னிதியாக அழைத்துச் சென்றனர். தரிசனத்திற்கு பின், பக்தர்களுக்கு சுவாமிகள் வழங்கிய அருளுரை:
நாட்டு மக்கள் அனைவருக்கும் கடவுள் அருள்புரிய வேண்டும். நல்லது செய்ய வேண்டும் என பிரார்த்தனை செய்தோம். நம் சனாதன ஹிந்து தர்மத்தை நிலைநாட்டியவர் ஸ்ரீஆதிசங்கரர். அவர் இயற்றிய சுப்பிரமணிய புஜங்க ஸ்தோத்திரம் நுாலில் கோயிலுக்கு வந்துவிட்டால், எதை பார்க்க வேண்டும், எதை கேட்க வேண்டும், எப்படி வழிபட வேண்டும் என்பதை சொல்லிக் கொடுக்கிறார்.
கோயிலுக்கு வந்துவிட்டால் கண்கள் கடவுளை மட்டுமே தரிசிக்க வேண்டும்; கடவுள் பற்றிய வரலாறு, கடவுளின் ஸ்லோகங்களை மட்டுமே சொல்ல வேண்டும்; காதுகளால் கேட்க வேண்டும்; கைகளால் பூஜை செய்ய வேண்டும்.
மனம் முழுக்க இறைவனை பற்றிய சிந்தனையிலேயே இருக்க வேண்டும் என்பதை ஸ்ரீஆதிசங்கரர் வலியுறுத்தியுள்ளார்.
கோயிலுக்கு வந்துவிட்டால் வேண்டாத பேச்சுகளை பேசக் கூடாது, கேட்கக் கூடாது, பார்க்கக் கூடாது. என்ன செய்தாலும், அது இறைவனுக்கு உரியதாகவே இருக்க வேண்டும் என்பதை, ஸ்ரீஆதிசங்கரர், சுப்பிரமணிய புஜங்க ஸ்தோத்திரத்தில் வழிகாட்டியுள்ளார். இங்கு அம்பாள் சகிதமாக இருக்கும் சண்முகரை தரிசனம் செய்தோம்.
அப்போது முருகனின் ஆறுமுகங்கள் குறித்து, சுப்பிரமணிய புஜங்க ஸ்தோத்திரத்தில் ஸ்ரீஆதிசங்கரர் கூறியிருப்பது நினைவுக்கு வந்தது. வானில், ஆறு முழு நிலவுகள் ஒரே நேரத்தில் தோன்றினால் எவ்வளவு அழகாக இருக்குமோ அதுபோல, முருகனின் ஆறு முகங்கள் இருக்கும் என வர்ணிக்கிறார். காலங்காலமாக நாம் முருக கடவுளை வழிபட்டு வருகிறோம் என்றார்.