/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடிகாலில் சட்டவிரோத இணைப்புகள் சாலையில் கழிவுநீர் பாய்வதால் சீர்கேடு
/
வடிகாலில் சட்டவிரோத இணைப்புகள் சாலையில் கழிவுநீர் பாய்வதால் சீர்கேடு
வடிகாலில் சட்டவிரோத இணைப்புகள் சாலையில் கழிவுநீர் பாய்வதால் சீர்கேடு
வடிகாலில் சட்டவிரோத இணைப்புகள் சாலையில் கழிவுநீர் பாய்வதால் சீர்கேடு
ADDED : ஜன 13, 2024 12:05 AM

அண்ணா நகர் சூளைமேடு பெரியார் பாதையில், மழைநீர் வடிகாலில் இருந்து சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீரால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
அண்ணா நகர் மண்டலம், 106வது வார்டிலுள்ள சூளைமேடில், பெரியார் பாதை உள்ளது. இந்த பிரதான சாலை, சூளைமேடில் துவங்கி, திருநகர் வழியாக, 100 அடி சாலையில் இணைகிறது.
இச்சாலையில், பூலியூர் ஹவுசிங் போர்டு குடியிருப்பின் பின்புற வாயிலின் எதிர்புறத்தில், கடந்த 10 நாட்களாக சாலையில் கழிவுநீர் பாய்கிறது.
இந்த நீரானது, சாலையோர மழைநீர் வடிகாலில் இருந்து கசிந்து, சாலை முழுதும் பாய்வதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடும் நிலவுகிறது. எனவே, கழிவுநீர் தேங்கும் பிரச்னைக்கு, நிரந்தர தீர்வு காண வேண்டுமென, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து, அப்பகுதியில் குடியிருப்போர் கூறியதாவது:
சூளைமேடு, பெரியார் பாதையை ஒட்டியுள்ள சில தெருக்களில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள், கடந்த ஓராண்டாக நடந்து வருகின்றன.
தற்போது, இங்குள்ள அண்ணா சாமி தெருவில் வடிகால் பணி நடக்கிறது. இதனால், பெரியார் பாதையில் உள்ள வடிகால் அடைக்கப்பட்டதாக தெரிகிறது.
இதன் காரணமாக, பெரியார் பாதையில் உள்ள வடிகாலில் இருந்து, கடந்த 10 நாட்களாக கழிவுநீர் கசிந்து, சாலை பாய்கிறது.
இப்பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட வீடுகள், சட்டவிரோதமாக கழிவுநீர் இணைப்பை வடிகாலில் இணைத்துள்ளது, தற்போது அம்பலமாகி உள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்டுகொள்வதில்லை. 10 நாட்களுக்கும் மேல் சாலையில் கழிவுநீர் பாய்வதால், இப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது.
இதனால் மூச்சுத்திணறலும், சிலருக்கு உடல் ரீதியாகவும் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சாலையில் கழிவுநீர் வழிந்தோடும் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.