/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புதுப்பொலிவுக்கு மாறிய அமுதம் அங்காடிகள் தினசரி விற்பனை ரூ.2.50 லட்சமாக அதிகரிப்பு
/
புதுப்பொலிவுக்கு மாறிய அமுதம் அங்காடிகள் தினசரி விற்பனை ரூ.2.50 லட்சமாக அதிகரிப்பு
புதுப்பொலிவுக்கு மாறிய அமுதம் அங்காடிகள் தினசரி விற்பனை ரூ.2.50 லட்சமாக அதிகரிப்பு
புதுப்பொலிவுக்கு மாறிய அமுதம் அங்காடிகள் தினசரி விற்பனை ரூ.2.50 லட்சமாக அதிகரிப்பு
UPDATED : அக் 13, 2024 02:38 AM
ADDED : அக் 13, 2024 02:32 AM

சென்னை:தமிழக அரசின் முயற்சிக்கு பலன் கொடுக்கும் வகையில், புதுப்பொலிவுக்கு மாற்றப்பட்ட, சென்னை, கோபாலபுரத்தில் உள்ள அமுதம் அங்காடியில் தினசரி விற்பனை, 25,000 ரூபாயில் இருந்து, 2.50 லட்சம் ரூபாயாகவும், அண்ணா நகரில், 20,000 ரூபாயில் இருந்து இரண்டு லட்சம் ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம், வீட்டிற்கு தேவையான மளிகை உள்ளிட்ட பொருட்களை, வெளிச்சந்தையை விட சற்று குறைந்த விலைக்கு விற்க, 'அமுதம்' என்ற பெயரில் பல்பொருள் அங்காடியை நடத்துகிறது. சென்னையில் - 17, கடலுாரில் இரண்டு அங்காடிகள் உள்ளன. இதுதவிர, மாநிலம் முழுதும், 'அம்மா அமுதம்' பெயரில், 61 சிறிய பல்பொருள் அங்காடிகள் நடத்தப்படுகின்றன.
பல ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட அமுதம் அங்காடிகளில் துாசி படர்ந்தும், சேதமடைந்தும் காணப்படுகின்றன. இதனால், வாடிக்கையாளர்கள் குறைந்தனர். பலருக்கு அமுதம் அங்காடி இருக்கும் விபரமே தெரியவில்லை.
தனியார் பல்பொருள் அங்காடிகள் முழுதுமாக குளிர்சாதன வசதியுடன் காட்சி அளிக்கின்றன. தள்ளுபடி விற்பனை அறிவிப்புகளால், வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு காணப்படுகிறது.
எனவே, அனைத்து தரப்பினரும் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், அனைத்து அமுதம் அங்காடிகளையும் சீரமைத்து, புதுப்பொலிவுக்கு மாற்ற, உணவு துறை முடிவு செய்தது.
முதல் கட்டமாக, சென்னை கோபாலபுரம், அண்ணா நகரில் உள்ள அங்காடிகளில் புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கோபாலபுரம் அங்காடி, கடந்த ஆண்டு ஆகஸ்டிலும், அண்ணா நகர் அங்காடி கடந்த செப்டம்பரிலும் புதுப்பிக்கப்பட்டன. அவற்றில் குளிர்சாதன வசதி, புதிய, 'ரேக்'குகள் என, தனியார் அங்காடிக்கு இணையாக அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன.
முன்னணி நிறுவனங்களின் பிராண்டில் மளிகை, அரிசி, சமையல் எண்ணெய் என, 3,000க்கும் மேற்பட்ட பொருட்கள் விற்கப்படுகின்றன. அவற்றின் எம்.ஆர்.பி., எனப்படும் அதிகபட்ச சில்லரை விலையில் இருந்து, 5 சதவீதம் முதல் 55 சதவீதம் வரை, தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இதனால், அதிகம் பேர் வருவதால் கோபாலபுரம் அங்காடியில் தினமும், 25,000 ரூபாயாக இருந்த விற்பனை, 2.50 லட்சம் ரூபாயாகவும், அண்ணா நகர் அங்காடியில், 20,000 ரூபாயாக இருந்த விற்பனை, இரண்டு லட்சம் ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
எனவே, மற்ற அங்காடிகளையும் விரைவில் புதுப்பிக்கும் பணியில் வாணிப கழகம் ஈடுபட்டுள்ளது.
அதன்படி, சென்னை நந்தனம், பெரியார் நகர், மயிலாப்பூர், புரசைவாக்கம் ஆகிய இடங்களில் உள்ள அமுதம் அங்காடிகளை புதுப்பிக்கவும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பின்புறத்தில் புதிதாக அமுதம் அங்காடி திறக்கவும் வாணிப கழகம் முடிவு செய்துள்ளது.