ADDED : ஜூன் 18, 2026 03:33 AM
சென்னை: திருவள்ளூர் வல்லுார் அனல் மின் நிலையத்தின் இரு அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், தமிழகத்திற்கு, 300 மெகா வாட் மின்சாரம் தான் கிடைக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் வல்லுாரில் தேசிய அனல் மின் கழகம் மற்றும் தமிழக மின் வாரியத்திற்கு கூட்டு அனல் மின் நிலையம் உள்ளது. அங்கு தலா, 500 மெகா வாட் திறனில் மூன்று அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதிலிருந்து தமிழகத்திற்கு தினமும், 1,060 மெகா வாட் மின்சாரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வல்லுார் மின் நிலையத்தின் இரண்டாவது அலகில் ஆண்டு பராமரிப்பு பணி காரணமாக, கடந்த 11ம் தேதி முதல் ஒன்றரை மாதங்களுக்கு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மூன்றாவது அலகில், 'பாய்லர் டியூப் பஞ்சர்' காரணமாக, நேற்று முன்தினம் மாலை முதல் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வல்லுார் மின் நிலையத்தில் இருந்து தமிழகத்திற்கு சராசரியாக, 300 மெகா வாட் அளவிற்கு தான் மின்சாரம் கிடைக்கிறது.
