/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரேஸ்கோர்ஸ் வளாக குளங்களின் பரப்பு அதிகரிப்பு 24.83 கோடி லிட்டர் தண்ணீர் சேமிக்க நடவடிக்கை
/
ரேஸ்கோர்ஸ் வளாக குளங்களின் பரப்பு அதிகரிப்பு 24.83 கோடி லிட்டர் தண்ணீர் சேமிக்க நடவடிக்கை
ரேஸ்கோர்ஸ் வளாக குளங்களின் பரப்பு அதிகரிப்பு 24.83 கோடி லிட்டர் தண்ணீர் சேமிக்க நடவடிக்கை
ரேஸ்கோர்ஸ் வளாக குளங்களின் பரப்பு அதிகரிப்பு 24.83 கோடி லிட்டர் தண்ணீர் சேமிக்க நடவடிக்கை
ADDED : ஆக 11, 2025 01:36 AM

கிண்டி,:கிண்டி, வேளச்சேரியில் ஏற்படும் வெள்ளப் பாதிப்பை தடுக்க, ரேஸ்கோர்ஸ் வளாகத்தில் வெட்டப்பட்ட நான்கு குளங்களின் பரப்பை அதிகரித்து, 13.50 கோடி லிட்டரில் இருந்து, 24.83 கோடி லிட்டர் தண்ணீர் சேமிக்கும் வகையில், 93 லட்சம் ரூபாயில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அடையாறு மண்டலம், 172வது வார்டு, கிண்டி ரேஸ்கோர்ஸ் வளாகம், 160 ஏக்கர் பரப்பு கொண்டது. கடந்த 1945ம் ஆண்டு முதல், குத்தகை அடிப்படையில் குதிரை பந்தயம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால், 1970ம் ஆண்டு முதல் வாடகை செலுத்தாததால், தமிழக அரசு ரேஸ்கோர்ஸ் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் வழங்கியது. இது தொடர்பான உயர்நீதிமன்ற வழக்கில், வாடகை செலுத்தாவிட்டால் நிலத்தை எடுத்து கொள்ளலாம் என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, 2024ம் ஆண்டு, செப்., மாதம் இடத்தை தமிழக அரசு மீட்டது.
இந்த ரேஸ்கோர்ஸ் வளாகத்தில், மழைநீரை முறையாக கையாள போதிய கட்டமைப்பு அமைக்கவில்லை. இதனால், கடந்த 2023ம் ஆண்டு பெய்த கனமழையில், ரேஸ்கோர்ஸ் வளாகத்தில் சேர்ந்த மழைநீரை ஒரே நேரத்தில் மொத்தமாக வெளியேற்றியதால், ஐந்து பர்லாங் சாலையில் உள்ள கட்டுமான பள்ளத்தில் மண் சரிந்து, இரண்டு பேர் பலியாகினர்.
அப்போது, மழைநீரை முறையாக கையாளாத, மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவை மதிக்காத ரேஸ்கோர்ஸ் நிர்வாகத்திற்கு, மாநகராட்சி ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.
இந்நிலையில், மீட்கப்பட்ட இடத்தில் குளம் அமைத்து மழை வெள்ளத்தை சேமிக்க, மாநகராட்சி முடிவு செய்தது. ரேஸ்கோர்ஸ் வளாகத்தை நீர்நிலையாக மாற்ற வேண்டும் என, பசுமை தீர்ப்பாயமும் அறிவுறுத்தியது.
மொத்தம் 160 ஏக்கர் இடத்தில், 118 ஏக்கர் இடம் மைதானமாக உள்ளது. இதில், ஒரு ஏக்கர் பரப்பில், ஏற்கனவே இரண்டு குளங்கள் இருந்தன. அவை மேம்படுத்தப்பட்டன. அதோடு, 2024ம் ஆண்டு நவ., மாதம், கூடுதலாக 27,647 சதுர மீட்டர் பரப்பில் நான்கு குளங்கள் வெட்டப்பட்டன.
ஒவ்வொரு குளமும், 12 முதல் 18 அடி ஆழம் கொண்டவை. இதில், 13.50 கோடி லிட்டர் தண்ணீர் சேமிக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டது.
இந்நிலையில், நான்கு குளங்களையும் விரிவாக்கம் செய்து, நீரில் கொள்ளளவை அதிகரிக்க மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக, 93 லட்சம் ரூபாயில் பணி துவங்கப்பட்டுள்ளது.
நான்கு குளங்களும், கூடுதலாக தலா 6,000 முதல் 9,600 சதுர மீட்டர் பரப்பு வீதம், மொத்தம் 50,000 சதுர மீட்டராக விரிவாக்கம் செய்யப்பட உள்ளன. இந்த வகையில், 11.33 கோடி லிட்டர் கூடுதலாக தண்ணீர் சேமிக்க முடியும் என, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.
இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த ஆண்டு நவ., மாதம் வெட்டப்பட்ட குளங்களில், அப்போதைய பருவமழையில் நேரடியாக மழைநீர் விழுந்ததால் நன்னீரானது. அதில், மீன்கள் விடப்பட்டுள்ளன.
கூடுதல் தண்ணீர் சேமிக்கும் வகையில், நான்கு குளங்களையும் விரிவாக்கம் செய்யும் பணி நடக்கிறது. இதன் வாயிலாக, 11.33 கோடி லிட்டர் கூடுதலாக, மொத்தம் 24.83 கோடி லிட்டர் தண்ணீர் சேமிக்க முடியும்.
இதனால், கிண்டி, மடுவாங்கரை, ஐந்து பர்லாங் சாலை, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, நேரு நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்படும் வெள்ளப் பாதிப்பு, கணிசமாக தடுக்கப்படும். சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.