/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஒக்கியம்மடுவில் 230 அடி நீளத்தில் புதிய தரைப்பாலம் நீரோட்ட பாதைக்கான பில்லர் இடைவெளி அதிகரிப்பு
/
ஒக்கியம்மடுவில் 230 அடி நீளத்தில் புதிய தரைப்பாலம் நீரோட்ட பாதைக்கான பில்லர் இடைவெளி அதிகரிப்பு
ஒக்கியம்மடுவில் 230 அடி நீளத்தில் புதிய தரைப்பாலம் நீரோட்ட பாதைக்கான பில்லர் இடைவெளி அதிகரிப்பு
ஒக்கியம்மடுவில் 230 அடி நீளத்தில் புதிய தரைப்பாலம் நீரோட்ட பாதைக்கான பில்லர் இடைவெளி அதிகரிப்பு
ADDED : டிச 04, 2025 02:01 AM

சென்னை: தென்சென்னை பகுதியில் இருந்து வெளியேறும் மழைநீர், தடையின்றி செல்லும் வகையில், ஓ.எம்.ஆர்., ஒக்கியம்மடுவில் அமைக்கப்படும் தரைப்பாலத்தின் பில்லர்களின் இடைவெளி, 40 அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
தென்சென்னை புறநகர் பகுதியில் உள்ள 62 ஏரிகள், 200க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் கால்வாய், வடிகால்வாய்களில் இருந்து வெளியேறும் மழைநீர், துரைப்பாக்கம், ஒக்கியம்மடு வழியாக, பகிங்ஹாம் கால்வாயை அடைந்து, முட்டுக்காடு கடலில் சேர்கிறது.
ஒக்கியம்மடுவின் குறுக்கே, ஓ.எம்.ஆர்., என்ற பழைய மாமல்லபுரம் சாலையின் குறுக்கே செல்கிறது. ஓ.எம்.ஆரில் அமைக்கப்படும் மெட்ரோ ரயில் பாதைக்கான பில்லர், இந்த மடுவின் மையத்தில் அமைய உள்ளதால், மைய பகுதி சாலையை அகற்ற வேண்டியுள்ளது. அதனால், அதற்கு அருகிலேயே புதிதாக ஸ்டீல் பாலம் அமைத்து, மடு அகலப்படுத்தப்படுகிறது.
அந்த வகையில், தற்போதைய சாலையின் இரு மார்க்கத்திலும், 25 அடி அகலம், 630 அடி நீளத்தில் புதிய தரைப்பாலம் அமைக்கப்படுகிறது. இதில், மடுவின் மைய பகுதியில், ஒரு மீட்டர் அளவுக்கு பாலம் உயர்த்தப்பட்டுள்ளது.மேலும், சாலையின் இரு மார்க்கத்திலும், கேபிள், குடிநீர், கழிவுநீர் குழாய் அமைக்க தனி கட்டமைப்பு அமைத்து, அதற்கு மேல் நடைபாதை அமைக்கப்பட உள்ளது.
மொத்த பணிகளும், 250 கோடி ரூபாயில் நடக்கிறது. இதுகுறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது: முந்தைய தரைப்பாலத்தில், 20 மீட்டர் இடைவெளியில் நான்கு பில்லர்கள் அமைக்கப்பட்டன.
தற்போது அமையும் புதிய தரைப்பாலத்தில், 40 மீட்டர் இடைவெளியில், 6 பில்லர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தலா 25 அடி அகலம், 630 அடி நீளத்தில், இருவழி பாதைக்கு இரண்டு தரைப்பாலம் அமைக்கும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது. இதில், சோழிங்கநல்லுாரில் இருந்து துரைப்பாக்கம் நோக்கி செல்லும் மேற்கு திசை தரைப்பாலம், ஒரு வாரத்தில் திறக்கப்படும். இம்மாத இறுதியில், கிழக்கு திசை தரைப்பாலம் திறக்கப்படும்.
அதை ஒட்டி, நடைபாதையுடன் கேபிள், குழாய் பதிக்க தனி கட்டமைப்பு அமைக்கப்படும். இரண்டு திசைகளிலும் தரைப்பாலம் திறக்கப்பட்ட பின், தற்போதைய சாலையை தகர்த்துவிட்டு, மெட்ரோ ரயில் பாதைக்கான பில்லர் அமைக்கப்படும்.
அந்த பணி முடிந்ததும், தரைப்பாலம் தலா 33 அடி அகலமாக மாற்றப்படும். இதற்கு, ஒரு ஆண்டு வரை ஆகும்.
புதிய தரைப்பாலம் கட்டமைப்பால், மடுவில் அடைப்பு காரணமாக ஏற்படும் வெள்ள பாதிப்பு தடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

