ADDED : ஏப் 06, 2026 10:21 PM
சென்னை: எழும்பூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட, நேற்று ஒரே நாளில் 11 சுயேச்சை வேட்பாளர்கள், வேட்பு மனு தாக்கல் செய்ததால், இத்தொகுதியில் போட்டி சூடுபிடித்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 30ம் தேதி துவங்கி, நேற்று நிறைவடைந்தது.
எழும்பூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட, நேற்று ஒரே நாளில் மட்டும், 17 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் 11 பேர் சுயேச்சை வேட்பாளர்கள்.
தி.மு.க., - த.வெ.க., உள்ளிட்ட முக்கிய கட்சி வேட்பாளர்களுடன் இணைந்து, சுயேச்சை வேட்பாளர்கள், காலை 11:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை, எழும்பூர் தாசில்தார் அலுவலகத்தில், ஆர்வமுடன் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
மேலும், இத்தொகுதியில் போட்டியிட, தி.மு.க., சார்பில் தமிழன் பிரசன்னா, அ.தி.மு.க., அபிஷேக் ரங்கசாமி, நா.த.க., வேட்பாளர் சரண்யா மற்றும் த.வெ.க., சார்பில் ராஜ்மோகன் ஆகியோர் புது முகங்களாக அறிமுகமாகியுள்ள நிலையில், முக்கிய கட்சிகளுக்கு இணையாக சுயேச்சை வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளதால், போட்டி மேலும் சூடுபிடித்துள்ளது.
