/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.3 கோடி இடத்தை அபகரிக்க முயற்சி புழுதிவாக்கத்தில் தனி நபர் அத்துமீறல்
/
ரூ.3 கோடி இடத்தை அபகரிக்க முயற்சி புழுதிவாக்கத்தில் தனி நபர் அத்துமீறல்
ரூ.3 கோடி இடத்தை அபகரிக்க முயற்சி புழுதிவாக்கத்தில் தனி நபர் அத்துமீறல்
ரூ.3 கோடி இடத்தை அபகரிக்க முயற்சி புழுதிவாக்கத்தில் தனி நபர் அத்துமீறல்
ADDED : மார் 06, 2024 12:37 AM
புழுதிவாக்கம், தென் சென்னை புழுதிவாக்கம், ராம் நகர் அருகே, சிவப்பிரகாசம் நகர் பிரதான சாலையில் 10 ஏக்கர் நிலத்தை குடியிருப்பு மனை பிரிவாக்க, 30 ஆண்டுகளுக்கு முன், தமிழக அரசு அனுமதி அளித்தது.
அதன்படி, தேனாம்பேட்டையில் இருந்த தமிழக அரசின் 'ஆடிட் ஜெனரல்' அலுவலக ஊழியர்களின் 'சொசைட்டி' சார்பில், 10 ஏக்கர் இடம் வாங்கப்பட்டது.
பின், குடியிருப்பு பகுதிகளுக்கான மனை ஒதுக்கப்பட்டு, 'ஏ.ஜி.எஸ்., காலனி' என பெயரிடப்பட்டது. அதற்கான சங்கமும், 52 உறுப்பினர்களால் துவக்கப்பட்டது.
இந்த 10 ஏக்கர் இடத்தில் பூங்கா, மசூதி, கடைகள் மற்றும் சாலைகளுக்கு உரிய இடம் ஒதுக்கப்பட்டது போக, மீதமுள்ள இடத்தில் வீடுகள் கட்ட, 52 மனைப்பிரிவுகள் உருவாக்கப்பட்டன.
மேற்கண்ட பிரிவுகளில், 2,575 சதுர அடி உள்ள, 37வது மனைப் பிரிவு, நந்தினி என்பவருக்கு ஒதுக்கப்பட்டது. அந்த மனை தனக்கு வேண்டாம் என நந்தினி கூறியதால், அவருக்கு மாற்று இடம் ஒதுக்கப்பட்டது.
அந்த 37வது மனைப் பிரிவை, ஏ.ஜி.எஸ்., காலனி குடியிருப்போர் சங்கத்திற்கு பொதுவான இடமாக மாற்றி, பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதியப்பட்டது. பின், அவ்விடத்தில் கோவில் அல்லது சிறு பூங்கா அமைக்க, ஏ.ஜி.எஸ்., காலனி குடியிருப்போர் சங்கம் சார்பில் தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில், ஏ.ஜி.எஸ்., காலனி குடியிருப்போர் சங்கத்தில் உள்ள ஒருவர், அப்பகுதி அரசியல்வாதிகள் துணையுடன், நந்தினிக்கு முதலில் ஒதுக்கப்பட்ட 37வது மனை தனக்கு ஒதுக்கப்பட்டதாக போலி பத்திரம் தயாரித்து, வேறு ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார்.
இவ்விஷயம் ஏ.ஜி.எஸ்., காலனி குடியிருப்போர் சங்கத்திற்கு தெரியவர, நீதிமன்றம் வாயிலாக அந்த விற்பனை ரத்து செய்யப்பட்டு, 2013ல், ஏ.ஜி.எஸ்., காலனி குடியிருப்போர் சங்கம் வசமே, அந்த இடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், தேனாம்பேட்டையில் இருந்த, தமிழக அரசின் 'ஆடிட் ஜெனரல்' அலுவலக ஊழியர்களின் 'சொசைட்டி' கலைக்கப்பட்டது.
இதையறிந்த அந்நபர், அந்த மனைப் பிரிவு தனக்கே சொந்தம் என, குடியிருப்புவாசிகளை மீண்டும் மிரட்டி வருகிறார். இந்த ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டுமென, குடியிருப்புவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
குடியிருப்புவாசிகள் கூறியதாவது:
எங்களுக்கு சொந்தமான மனைப்பிரிவு 37ல் கோவில் கட்ட, இரு ஆண்டுகளுக்கு முன் கட்டுமான பணிகளைத் துவங்கினோம். அப்போது, குடியிருப்போர் சங்க உறுப்பினர் பாபு என்பவர் அடியாட்களுடன் வந்து, அந்த இடம் தனக்கே சொந்தம் என, கட்டுமான பணிக்கு இடையூறு செய்தார்.
பின், அந்த இடத்தைச் சுற்றிலும் சுவர் எழுப்ப, லாரிகளில் மண் கொண்டுவந்து நிரப்பினார். அவருக்குப் பின்புலமாக, இப்பகுதி ஆளுங்கட்சி அரசியல் பிரமுகர்கள் உள்ளனர்.
தற்போது, அந்த இடத்தில் சிறு பூங்கா அமைக்கலாம் என, குடியிருப்புவாசிகளால் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கும் பல இடையூறுகளை பாபு ஏற்படுத்தி வருகிறார்.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, அந்த இடத்தில் பூங்கா அல்லது கோவில் கட்டுமான பணிகளைத் துவக்க, குடியிருப்புவாசிகளுக்கு உதவ வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

