ADDED : ஆக 29, 2026 12:59 AM
சென்னை: பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் அகில்குமார், 35. பகுஜன் சமாஜ் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய கிருஷ்ணன் பயன்படுத்திய மொபைல் போன் எண், அகில்குமார் பெயரில் இருந்ததை சுட்டிக்காட்டி, இன்ஸ்., புஹாரி பணம் கேட்டு மிரட்டினார்.
மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்து விடுவதாக கூறி, இரண்டு ஆண்டுகளில், 40 லட்சம் ரூபாய் வரை பறித்துள்ளார். இது குறித்த புகாரின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் புஹாரியை, யானைக்கவுனி போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமின் கோரி இன்ஸ்., முகமது புஹாரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, சென்னை முதன்மை அமர்வு நீதிபதி பி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிபதி, குற்றத்தின் தீவிரம், வழக்கில் சம்பந்தப்பட்ட தொகை மற்றும் விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க முடியாது எனக்கூறி, புஹாரியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
